தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். என்றும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.
போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, லுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதாஜீவன் தலைமையில் ஊர்வலம் வந்த சுமார் 200 பேர், நாலாம் கேட் அருகே கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும், நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




