வைகோவின் கைகளை வெட்டுவேன் என பேசிய தி.மு.க. பிரமுகர் கைது

 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
பணத்திற்காக விலைபோகக்கூடிய வைகோ தி.மு.க.வை விமர்ச்சிப்பதற்கு தகுதியற்றவர். தொடர்ந்து தி.மு.க.வை வைகோ விமர்சித்தால், அவரது சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு திருமங்கலம் வழியாக அவர் வரும்போது அவரது கைகளை வெட்டுவோம் என்று மிரட்டல் விடுத்து பேசினார்.
அ.தி.மு.க. அரசையும், பெண்களை பற்றியும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக அ.தி.மு.க. சார்பில் சவுந்தர் என்பவர் திருமங்கலம் நகர்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் தமிழக அரசு மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பெண்களை அவதூறாக பேசுதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
தி.மு.க. பிரமுகரின் பொதுக்கூட்ட பேச்சின் வீடியோ ஆதாரங்களை சேகரித்த காவல் நிலையத்தினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.