விமான நிலையங்களில் தலைவர்கள் பெயர் நீக்கம்: மத்திய அரசு முடிவு

 

புது தில்லி,:

விமான நிலையங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள தலைவர்கள் பெயர்களை நீக்கிவிடலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அந்தந்த மாநில அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

நாடெங்கும் சில விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டப்படாமல் உள்ளது. அந்த விமான நிலையங்களுக்கு தங்கள் கட்சி தலைவரின் பெயரை சூட்ட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். சண்டிகர் நகரில் உள்ள விமான நிலையம் பஞ்சாப், அரியானா இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங் பெயரை சூட்ட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு கூறி வருகிறது. ஆனால் அரியானா மாநில அரசு, சண்டிகார் விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை புதிய கொள்கை ஒன்றை வரையறுத்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த மாத இறுதியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்போது, அதில், விமான போக்குவரத்துத் துறையின் கொள்கை குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கவுள்ளது.

தலைவர்களின் பெயர்கள் நீக்கப்படும் பட்சத்தில் அந்தந்த நகரின் பெயரிலேயே விமான நிலையத்தை அழைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் தலைவர்கள் பெயரை அகற்ற சம்மதம் தெரிவித்துள்ளனவாம்.