
ராம ஜன்மபூமி தீர்ப்பின் இந்தக் கட்டத்தில் நாம் நிற்கும்போது, 29 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதையும், ஸ்ரீ ராமருக்காக இந்துக்கள் எவ்வாறு போராடினார்கள் என்பதையும் நினைவுகூர வேண்டும்.
அக்டோபர் கடைசி நாட்களிலும் 1990 நவம்பர் மாத முதல் நான்கு நாட்களிலும் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் இந்திய வரலாற்றில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.
அக்டோபர் 1990 சம்பவங்கள் முலாயம் சிங், மற்றும் அவரது நிர்வாகத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தின. அனைத்து முயற்சிகளும் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான கரசேவகர்கள், அயோத்தியை அடைந்தனர்.
அயோத்தி செல்லும் வழியில் பல்வேறு நகரங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கரசேவகர்கள் கைது செய்யப்பட்டனர். அயோத்தி மற்றும் அண்டை மாவட்டங்களுக்கான எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.
அயோத்தி சுற்று – பரிக்ரமாவை அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஆண்டுதோறும் பஞ்ச்கோசி மற்றும் சவுதா கோசி பரிக்ரமா, மாநில நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக் கணக்கான மக்கள் வரும் நகரத்தின் மிக முக்கியமான யாத்திரை இவை.
ஜோதிஷ்பீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் உட்பட பல பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்களுடன் அனைத்து சாது-சாந்த்களும் அயோத்தி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் மற்றும் அவரது நிர்வாகத்தின் பங்கு மிக மோசமானது! பல ஆண்டுகளாக அது, மிகவும் கொடூரமானதாக அப்போது நிரூபிக்கப்பட்டது.

அயோத்தி ராமஜன்மஸ்தானில் உள்ள சிலாநியாஸ் மண்டபத்தை இடிக்கவும், ராம்லல்லாவின் விக்ரகத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவும் நிர்வாகம் முயன்றது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கும் சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. அயோத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பி.எஸ்.எஃப் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரில் ஒரு பகுதியினர் கரசேவகர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர். ஆயினும், அந்தப் படைப் பிரிவில் வேறு ஒரு பெரிய பிரிவு இருந்தது, அது உண்மையில் கரசேவகர்களுக்கு அனுதாபமாக இருந்தது.
இந்த அனுதாபம் அநேகமாக அனைத்து தடைகளையும் மீறி, கரசேவகர்களும் தலைவர்களும் அயோத்தியை பெரும் எண்ணிக்கையில் அடைவதில் வெற்றிபெற ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம்.!
கரசேவகர்கள், அக்டோபர் 30, 1990 அன்று ஜன்மஸ்தான் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த குவிமாடம் நோக்கி நகர்ந்தனர். சிலர் குவிமாடம் மீது ஏறி, காவிக் கொடியை ஏற்றினர். அவர்களில் இருவர் உடனடியாக பாதுகாப்புப் படைகளால் சுடப்பட்டனர். கரசேவையின் போது கரசேவகர்கள் பலர், படைகளால் கொல்லப்பட்டனர்! அவர்களின் உடல்கள் சரயு ஆற்றில் அப்படியே தள்ளப் பட்டன. இதுபோன்று அனாமதேயமாக சரயு நதியில் தள்ளப் பட்ட சாதுக்கள் மற்றும் கரசேவர்களின் உடல்கள் பல நாட்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டன.

நவம்பர் 2ம் தேதி மிகவும் பயங்கரமான நாள். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்டனர்! 100 க்கும் மேற்பட்டோர் தோட்டாக்களால் தலையில் அல்லது மார்பில் சுடப்பட்டு படுகாயமடைந்தனர்.
குவிமாடத்தின் மீது ஏறிய அணியில் இருந்த சகோதரர்கள் ஷரத் கோத்தாரி மற்றும் ராம் கோத்தாரி ஆகியோர், அவர்கள் அமர்ந்திருந்த ஒரு கோயிலில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் ரத்தத்தை உறைய வைக்கும் விதத்தில், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹேமந்த் ஷர்மா என்பவர் எழுதிய புத்தகமான ‘அயோத்தி கா சாஷ்மடிட்’-இல் குறிப்பிட்டுள்ளபடி, ஜோத்பூரைச் சேர்ந்த கரசேவகர் சீதாராம் கோரி, தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சாலையில் இருந்து ஒரு கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து, அருகில் இருந்த ஒரு சாக்கடையில் போடும்போது சுடப்பட்டதாக அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கரசேவகர்கள், எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி, மார்பிலும் தலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டார். மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் சர்மா தனது ‘யுத் மீ அயோத்தி’ புத்தகத்தில் கண்ணீர்ப்புகையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கரசேவகர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தபோது ஒரு சாது எவ்வாறு சுடப்பட்டார் என்று எழுதுகிறார்.
கரசேவகர்கள் மீது அடக்குமுறை கையாண்ட அதே நேரத்தில், செய்தித் தாள்கள் மீதும் மாநில அரசு அடக்குமுறையைக் கையாண்டது.

கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் ‘ஜன்சத்தா’ செய்திக் கட்டுரை இதைக் குறிப்பிட்டது. அதுவும் அடக்குமுறைக்கு ஆட்பட்டது. அயோத்தி மற்றும் அண்டை மாவட்டங்களில் கிட்டத்தட்ட பெரிய இந்தி செய்தித்தாள் எதுவும் வெளியிடவோ விநியோகிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள், அவற்றின் அனைத்து பிரதிகள் காவல்துறையினரால் பத்திரிகை அலுவலகங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன! எனவே விநியோகிக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆசிரியர்கள் பலர், செய்தித்தாள்களை வெளியிடுவதற்கான காவல் துறை நடவடிக்கையை எதிர்கொண்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலைமைச் செயலாளரும் டி.ஜி.பியும் அயோத்தியில் எந்தவிதமான துப்பாக்கிச் சூடும் நடத்தப் பட வில்லை என்று கூறினர். ஆனால், இது ஒரு தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நவம்பர் 3, 1990ல் ஒரு சம்பவம், இது இந்திய வரலாற்றில் தனித்துவமானது! இது ஹேமந்த் சர்மா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரிகளின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அயோத்தி ஆணையரின் இல்லத்தின் முன் முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கரசேவகர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர். முலாயம் சிங் அரசாங்கத்தின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் அவரது தீய திட்டத்தின் ஒரு பகுதியாக ராணுவத்தினரும் போலீஸாரும் மாற வேண்டாம் என்றும் அவர்கள் தங்கள் கணவர்களிடம் வற்புறுத்தினர்.
அவர்கள் ‘ஜெனரல் டையர் மத் பானோ’, ‘கர்சேவகோங் கீ ஹத்யா பந்த் கரோ’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப் பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, கரசேவகர்களுக்கு எதிரான நடவடிக்கை விரைவாக நிறுத்தப்படும் என்ற உறுதிமொழியைப் பெற்ற பிறகுதான் போராட்டத்தைக் கைவிட முடிவு செய்தனர்.
1990 ஆம் ஆண்டில், அயோத்தி கரசேவகர்கள் பலர் ரத்தம் சிந்தியதைக் கண்டு சாட்சியாய் நின்றது. அதன் பின்னர் 29 ஆண்டுகள் கடந்துவிட்டன.
1528 இல் தொடங்கிய 491 ஆண்டுகால போராட்டத்தின் உச்சக்கட்டமாக இன்று வழங்கப் பட்டிருக்கும் தீர்ப்பை இப்போது பார்க்கிறோம். பலரின் உயிர்கள் இழப்புக்குக் காரணமான ஒரு போராட்டம் இது… பலர்… பலர்… கோத்தாரி சகோதரர்களைப் போல!
கட்டுரையாளர்: ராகுல் கௌஷிக் (https://twitter.com/kaushkrahul)