கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில், செங்கோட்டை நகர பாஜக துணைத் தலைவராக இருக்கும் ஆ.கோமதிநாயகம், ‘தாயின் மடியில்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் உள்ளூர் மக்களை இணைத்து அவர்களுக்கு உதவிகள் பல செய்யத் தொடங்கினார். அப்போது கடைகள் அடைக்கப்பட்டு உணவுப் பொருள் எதுவும் கிடைக்காத சூழலில் பலர் கஷ்டப்படுவது தெரிந்தது. இதையடுத்து சிரமப் படும் மக்களுக்கு இரண்டு வேளை உணவு தயாரித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் செயலில் இறங்கினார்.
இவரது மனைவி, மகன்கள் உதவியுடன் வீட்டிலேயே உணவு தயாரித்து தினசரி மதியம் மற்றும் இரவு வேளைக்கும் சேர்த்து இரண்டு பொட்டலங்களாகக் கட்டி, செங்கோட்டை நகரத்தில் உள்ள ஏழைகள் வசிக்கும் பகுதியிலும் பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் நேரடியாகச் சென்று வழங்கிவந்தார்.
இவரது சேவையை பாராட்டி பலரும் உதவினர். அதன்மூலம் அவரது உணவு வழங்கும் பணி தடைபடாமல் தொடர்ந்து நடந்து வந்தது. இப்படி 200 நாட்களைக் கடந்து உணவு வழங்கும் பணி இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும், உணவுக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு நேரடியாகச் சென்று உணவு வழங்கி வருகிறார்.
இதனிடையே, தீபாவளிக்காக வேட்டி, துண்டு, சட்டை, புடைவைகள் எடுத்து, பேக் செய்து, அந்த மக்களைத் தேடித் தேடிச் சென்று, உணவு வழங்கியது போலவே உடையையும் நேற்று வழங்கியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தாயின் மடியில் நண்பர்கள் குழு செய்திருந்தது. ஆ.கோமதிநாயகத்துடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், பாஜக வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு அணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தலைவனார் M கணேசபாண்டியன், மற்றும் செங்கோட்டை ஒன்றிய பொது செயலாளர் தவனை முருகேசன், மற்றும் தீவிர உறுப்பினர் ஹரி ஐயர் .ஆகியோர் கலந்து கொண்டு, ஏழை எளியவர்க்கு வேட்டி சட்டை, துண்டு, புடைவைகளை வழங்கினர்.