ஜல்லிக்கட்டு அனுமதி: ராமதாஸ் பாராட்டு

சென்னை:
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்ததற்கு மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா… நடைபெறாதா? என்பது குறித்து கடந்த சில மாதங்களாக நிலவி வந்த ஐயமும், படபடப்பும், பதற்றமும் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த ஆணையைக் காரணம் காட்டி அப்போட்டிகளை நடத்த 2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். அன்புமணி கடந்த மாதம் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனுமதி அளிப்பதாக நரேந்திர மோடியும் வாக்குறுதி அளித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனும், ஜல்லிக்கட்டு பேரவையும் இச்சிக்கல் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தினர். இந்த விஷயத்தில் பல்வேறு காரணங்களால் சில மாதங்களாக இழுபறி நிலவினாலும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அடுத்த வாரம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது உறுதியாகி விட்டது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் சுய்ற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், இதற்காக பாடுபட்ட அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் இந்த போட்டிகளுக்கு எவரும் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்புகளை செய்யவும், இப்போட்டி இனி தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வசதியாக நிரந்த அனுமதி அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.