முகனூலில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க பிரமுகரை கைது செய்த தமிழக காவல்துறை : தமிழிசை கடும் கண்டனம்

 
சென்னை குரோம்பேட்டை அடுத்த, அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த, பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன்,50. சமீபத்தில், சமூக ஊடகமான முகனூல் பக்கத்தில், அரேபியாவின் வீர விளையாட்டு என்ன என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து இருந்தார்.
இந்தநிலையில் சிட்லபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வமணி என்பவர் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், கல்யாணராமன் முகனூலில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தி கருத்துகளை வெளியிட்டு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து நேற்று அதிகாலை சிட்லபாக்கம் காவல் நிலையத்தினர். கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: –
கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கருத்துகளுக்கு எதிர் கருத்துகள் வரலாம். அதற்கு கைது என்றால், கருத்து சுதந்திரத்தைப் பற்றி தமிழகத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளதா? இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையை தமிழக காவல்துறை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்யாணராமனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் முகனூலில் அவதூறு பரப்பியதாக சிட்லபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வமணி என்பவரை தமிழக காவல்துறை வேண்டும் என்றே தூண்டிவிட்டு அவர் பணியாற்றும் காவல் நிலையதிலேயே புகார் கொடுக்க சொல்லி கைது செய்துள்ளதாக பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அனுமதியின்றி பேனர் மற்றும் கட் அவுட்களை நடைபாதைகளை கூட விட்டு வைக்காமல் தொடர்ந்து வைத்து வருபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? அதற்க்கும் காவல் துறையில் பணியாற்றும் உழியரை காவல் நிலையதிலே புகார் கொடுக்க சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லும் துணிச்சல் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகரிகளுக்கு உண்டா என்றும் பாரதீய ஜனதா கட்சியினர் பரவலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள் .