பெங்களூரு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநில அரசு நிதி திரட்டும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கடுமையான வெள்ளத்துக்கு இயற்கைச் சீற்றம் காரணம் என்றும், வனத்தை அழித்து ஆற்றின் பாதைகளில் கட்டடங்களைக் கட்டியதே காரணம் என்றும், தெய்வக் குற்றம் காரணம் என்றும், சபரிமலை ஐயப்பன் மீது உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வழக்கு காரணம் என்றும் இப்படி பல்வேறு காரணங்களை கேரள மக்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் வாழும் மக்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கேரள வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழுவுக்கான காரணம் குறித்து கர்நாடக பாஜக., எம்எல்ஏ., பசன்கௌட பாட்டீல் யத்னால் கூறியுள்ள கருத்து பலராலும் பரவலாக பேசப்பட்டும் விமர்சிக்கப் பட்டும் வருகிறது. கேரளா வெள்ளம் குறித்து பேசிய அவர், கேரளாவில் பசுக்கள் கருணையின்றி துடிக்கத் துடிக்கக் கொல்லப் படுவதற்காக இயற்கை அளித்த தண்டனைதான் இந்த வெள்ளம். இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியதால் தான் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. பசுவதை என்பது இந்துக்களின் மத உணர்வுக்கு எதிரானது. மற்ற மதத்தின் உணர்வுகளை யாரும் காயப்படுத்த கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை கேரளாவில் இப்போது பார்க்கிறோம். அவர்கள் வெளிப்படையாக பசுக்களை கொன்றனர். இந்து மதத்தை காயப்படுத்துபவர்கள் இது போன்று தான் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினார்.
தமிழகத்தில் இருந்தும் கர்நாடகம், மகாராஷ்டிராவில் இருந்தும் அதிக அளவில் பசுக்கள் கேரளத்துக்குச் செல்கின்றன. வரன்முறையின்றி பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்கின்றனர் கேரளத்தில். இதனால் பசுக்களின் ரத்தக் கண்ணீரே, கேரள மக்கள் கண்ணீர் விடக் காரணமாக அமைந்திருக்கிறது என்ற விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.




