கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 நிர்ணயம்: ஜெயலலிதா

சென்னை:

கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட ரூ. 650 கூடுதலாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ரூ 2,300 என நிர்ணயம் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

வேளாண் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயப் பெருமக்களின் வாழ்வு செழிப்படையும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

நெல் சாகுபடி உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்படும் பரப்பினை அதிகரித்தல், பயறு வகைகள் சாகுபடியை பெருக்குதல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், துல்லிய பண்ணையம் மூலம் சாகுபடி மேற்கொள்ளுதல், சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்க மானியம் வழங்குதல், விளைபொருட்களை பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் அமைத்தல், வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் அளித்தல், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் என பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாகத் தான் உணவு தானிய உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனையை தமிழகம் படைத்து வருகிறது.

கரும்பு உற்பத்தி திறனை அதிகரித்து, கரும்பு உற்பத்தியை பெருக்கும் வகையிலும், சர்க்கரை ஆலைகள் முழு அரவைத் திறனை அடையும் வகையிலும், நிழல்வலை கூடத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்தல், பாசன நீர் மற்றும் உரங்களை திறனுடன் பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனத்தின் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசன உபகரணங்களுக்கென சிறு மற்றும் குறு விவசாயகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயித்து வருகிறது. மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விட உயர் அளவில் இந்த பரிந்துரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

2015-2016 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன்  மூலம்  கரும்பு விவசாயிகளுக்கு நடப்பு கரும்புப் பருவத்தில் டன் ஒன்றுக்கு  2,850 ரூபாய் கிடைக்கும்.

அரசின்  இந்த நடவடிக்கை,  கரும்பு  சாகுபடி  செய்யும்  விவசாயிகளுக்கு மனமகிழ்ச்சியினை அளிக்கும்