மால்டா கலவரப் பகுதியைப் பார்வையிட பாஜக., எம்பி.,க்களுக்கு அனுமதி மறுப்பு

மால்டா: 

மேற்கு வங்க மாநிலத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற பாஜக., எம்பி.,க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக.,வுக்கும் இடையே அரசியல் மோதல் முற்றி வருகிறது. அண்மையில்,மேற்கு வங்கத்தில் மால்டா அருகே கலியாசக் பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. காவல் நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வன்முறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். கலவரக்காரர்கள் மீது மேற்கு வங்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், மதக் கலவரம் ஏற்படவில்லை என்றும், பிஎஸ்எப் வீரர்களுடன் உள்ளூர்க்காரர்களுக்கு பிரச்னை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதனால், வன்முறையாளர்களைத் தடுத்து நிறுத்தாத திரிணாமுல், அவர்களைத் தூண்டி விடுகிறது என பாஜக., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே, மால்டா ரயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணிக்கு, பாஜக., தலைவர் அமித்ஷா உத்தரவில், கலவரப் பகுதியை பார்வையிடுவதற்காக வந்திறங்கிய அக்கட்சி எம்.பிக்கள் பூபேந்திர யாதவ், ராம் விலாஸ் வேதாந்தி, எஸ்.எஸ்.அலுவாலியா உள்ளிட்டோரிடம், கலியாசக் பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால், திரும்பிச் செல்லும்படி போலீசாரும் மாவட்ட அதிகாரிகளும் தெரிவித்தனர்.

வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், இறுதியில், வேறு வழியின்றி மேற்கு வங்க அரசு இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத் தக்கது எனக் கூறி திரும்பிச் சென்றனர்.