ஒரு மாதத்தில் 500 மீனவர்களை கைது செய்ய துடிப்பதா? : ராமதாஸ்

 ஒரு மாதத்தில் 500 மீனவர்களைக் கைது செய்ய துடிப்பதா? இலங்கையை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆணையிட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இலங்கை அமைச்சரின் இந்த அகம்பாவப் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறியிருக்கிறார். ‘‘ இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் தான் பொங்கல் திருநாளுக்கு பிறகு ஒரு மாதத்தில் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்ய சிங்கள கடலோர காவல்படைக்கும், கடற்படைக்கும் ஆணையிட்டிருக்கிறேன். இந்தியா எங்கள் நட்பு நாடு தான். இந்தியா கேட்டுக்கொண்டால் சில காலத்திற்கு பிறகு மீனவர்களை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வோம். ஆனால், மீனவர்களின் படகுகளை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம்’’ என்று இலங்கை அமைச்சர் திமிராக கூறியிருக்கிறார்.

இலங்கை அமைச்சர் அமரவீராவின் பேச்சில் இருந்து தெளிவாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவெனில்,  ‘‘எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக இலக்கு நிர்ணயித்து கைது செய்யப்படுகிறார்கள்’’ என்பது தான். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் அதில் குறைந்தபட்சம் நியாயம் இருக்கலாம். ஆனால், ஒரு மாதத்திற்குள் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், இந்திய மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறது என்று தான் பொருள். 500 மீனவர்களை கைது செய்வதற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய சிங்களக் கடற்படைக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிப்பதாகத் தான் கருத வேண்டும். இது இந்தியாவின்  வலிமைக்கும், இறையாண்மைக்கும் சவால் விடும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலாக கடல் எல்லை மிகவும் குறுகலானது. அதனால் இரு நாட்டு மீனவர்களையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் மீன்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. அதுமட்டுமின்றி இரு நாடுகளின் கடல் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பிருந்தே பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அத்தகைய பாரம்பரிய உரிமையை பன்னாட்டு நீதிமன்றங்களும் அங்கீகரித்துள்ளன. இத்தகைய நிலையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தான் சரியான செயலாக இருக்கும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை இலக்கு நிர்ணயித்து கைது செய்வதாக கொக்கரிப்பது சரியான செயலாக இருக்காது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்களை அத்துமீறி நுழைந்து சிறை பிடிப்பதையும், மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு வழக்கமாக வைத்துள்ளது. இன்றைய நிலையில்  தமிழக மீனவர்கள் 104 பேர் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 66 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இதனால் அந்தப் படகுகள் சேதமடைந்து வருகின்றன. படகுகளை விடுவிக்கும்படி இப்போதைய இலங்கை அதிபர், பிரதமர் ஆகிய இருவரிடமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியும் அதற்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, இனி இந்தியா கோரினாலும் படகுகளை திரும்பத்தர மாட்டோம் என்று கூறுவது இந்திய அரசை சீண்டும் செயல் ஆகும். கச்சத்தீவை தாரை வார்த்தது உட்பட இலங்கையை ஆதரவு நாடாக மாற்றுவதற்காக இந்தியா தேடித்தேடிச் சென்று செய்த உதவிகளும், அளித்த சலுகைகளும்  தான் இந்தியாவைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் அளவுக்கு இலங்கைக்கு திமிரை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் அத்துமீறலை இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே 21.10.2003 அன்று தில்லியில் நடைபெற்ற  பேச்சுக்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகளை மட்டும் வழக்கு விசாரணை முடியும் வரை பறிமுதல் செய்து வைத்துக்வைக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது (It was agreed that while it was important that the fishermen should be released early, the boats may be held till the judicial processes in the two countries are completed)’’எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு தான் தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்கிறது. 

இலங்கைக்கு இன்று சென்று அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன்  பேச்சு நடத்தவிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்களை கைது செய்வதோ, படகுகளை பறிமுதல் செய்வதோ கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டும்; இலங்கையில் இப்போது சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அத்துடன், இரு நாடுகளும் இணைந்து 21.10.2003 தேதி வெளியிட்ட கூட்டறிக்கை உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.