மாமியாரை அடித்துத் துன்புறுத்திய மருமகள்: ரகசிய கேமராவில் சிக்கிய காட்சியால் அதிர்ச்சி

லக்னோ:

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிஜ்னூர் பகுதியில், தனது மாமியாரை மருமகப் பெண் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில், மாமியாரைத் தாக்குவது, எலக்ட்ரிக் சாதனம் உள்ளிட்டவற்றால்  துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 5-ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆளான மாமியார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் காட்சிகளைக் காண கேமராவை வைத்தவர் அந்தப் பெண்ணின் கணவர். அதாவது தனது  தாயார் துன்புறுத்தப் படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கேமராவை வைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த போது,  “என்னுடைய மனைவியின் நடவடிக்கையை அறியவே அந்த சிசிடிவி கேமராவை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பொருத்தினேன். இருப்பினும் தற்பொழுதும் அவள் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை” என அந்தக் கணவர் தெரிவித்தார்.

இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.