சபரிமலைக்கு பெண்கள் செல்வதா?: ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை:

சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து என்று கூறினார்.
மேலும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட வயதுக்கு கீழும், குறிப்பிட்ட வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் செல்லலாம் என்ற விதிமுறை வைக்கப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் இடத்தின் தன்மையைப் பொறுத்து சில விதிமுறைகள் வகுக்கப்படுகிறது. சபரி மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த காட்டுவழி. அந்த பாதை பெண்களுக்கு உகந்தது அல்ல என்பதால் வயது வரம்பை நிர்ணயித்து இருக்கிறார்கள்.

என்னென்ன விரதம்? எப்படியெல்லாம் கடை பிடிக்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முக்கியமாக தன்னை கட்டுப்படுத்துதல். மாலை அணிந்து பக்தர்கள் வீட்டில் கூட பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளார்கள். அசைவ உணவை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் அதை ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களிடம் அசைவ உணவை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்த முடியுமா?

அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் கட்டுப்பாடுகள் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. பிற மதங்களிலும் பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைப் பற்றி விமர்சிக்கவோ, தலையிடவோ அதிகாரம் இல்லை. அதே போல் இந்துக்கள் வழிபாட்டு முறைகளையும் மீறக்கூடாது என்று சொல்வதில் என்ன தவறு? வழிபாட்டு முறைகளில் தலையிடும் போது கவனமாக செயல்பட வேண்டும். எந்த அய்யப்ப பக்தரும் தனது மனைவியை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று உரிமை கோருவதில்லை. நாத்திகவாதிகள், பொதுவுடமைவாதிகள் தலையிட எந்த உரிமையும் இல்லை.

ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினர் மட்டும்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்கும். சம்பந்தம் இல்லாதவர்களை அனுமதிப்பார்களா? சில இடங்களில் பெண்கள் மட்டுமே வழிபடும் உரிமை உள்ளது. அங்கு ஆண்கள் செல்லமுடியாது. அய்யப்பன் கோவில் ஒன்றும் சுற்றுலாத்தலம் இல்லை. அங்கு செல்ல சுயக்கட்டுப்பாடு தேவை.

எரிமேலியில் வாவர் தர்காவுக்கு இருமுடி கட்டு சுமந்தபடி அய்யப்ப பக்தர்கள் செல்கிறார்கள். அதற்காக ஏனைய தர்காகளிலும் அப்படி செல்வோம் என்று அடம் பிடிக்க முடியுமா? அனுமதிப்பார்களா? விதண்டாவாதிகளால் பிரச்னைதான் ஏற்படுகிறது என்றார் அவர்.