October 29, 2021, 1:35 am
More

  ARTICLE - SECTIONS

  பூக்கள் வேர்களைக் கொண்டாடும் தினம்… ஆசிரியர் தினம்!

  “எழுத்தறிவிக்கும்” எண்ணற்ற ஆசிரியர்களை எண்ணிப் போற்றும் நாளாக ‘ஆசிரியர் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

  teachers

  பூக்கள் வேர்களைக் கொண்டாடும் தினம்!
  – கட்டுரை: கமலா முரளி –

  ” மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கவேண்டும். இல்லாவிடில் அவர்களுடைய செயல், நாட்டிற்குத் தலைகுனிவையும், ஏமாற்றத்தையும் உண்டுபண்ணும். ஆசிரியர் செய்வதையே மாணவர் பின்பற்றுவர். ஆகவே முந்தியர் சரியான வழிகாட்டுவது அவசியம். மேலும் மூளைத்திறனைவிட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்……” என்று டாக்டர் இராதாகிருட்டிணன் கூறியுள்ளார்.

  “ஆசு” என்றால் ”குற்றம்”. “இரியர்” என்றால் ”நீக்குபவர்”. குற்றங்களை, மாசுகளை நீக்கி, பிள்ளகளை, “மாண்பு” உள்ளவாராக “ஆக்குதல்” ஆசிரியரின் பணியாம்.

  “எழுத்தறிவிக்கும்” எண்ணற்ற ஆசிரியர்களை எண்ணிப் போற்றும் நாளாக ‘ஆசிரியர் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

  சர்வதேச ஆசிரியர்கள் தினம், யுனெஸ்கோ அமைப்பின் வழிகாட்டுதலுடன், ஆண்டுதோறும் அக்டோபர் ஐந்தாம் நாள் அனுசரிக்கப்பட்டாலும், இந்தியாவில், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினமாகிய செப்டம்பர் ஐந்தாம் நாளே ஆசிரியர் தினமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

  சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆவார். பின்னர், டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களைத் தொடர்ந்து,சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் ஆனார். பாரத ரத்னா விருது பெற்றவர். சிறந்த தத்துவஞானி,அறிஞர் என்ற பல சிறப்புகள் இருந்தாலும், ஆசிரியப்பணியில் இருந்து தொண்டாற்றியவர் என்ற தனிச்சிறப்பும் புகழும் பெற்ற, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்  பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் நாள், ஆசிரியர் தினமாக 1966ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது.

  சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

  1888 ஆம் ஆண்டு, இராதாகிருஷ்ணன், திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில் , தெலுங்கு நியோகி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சர்வபள்ளி வீராசாமி , தாயார் சீதம்மா. திருவள்ளூரிலும், திருப்பதியிலும் பள்ளிக்கல்வி பயின்ற இராதாகிருஷ்ணன், வேலூரிலும் சென்னையிலும் இளங்கலை மற்றும் முதுகலைக்கல்வி பயின்றார்.

  1909 ஆம் ஆண்டு சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்றார்.இந்துமத இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்ட இராதாகிருஷ்ணன்,புத்த மத, ஜைனமத தத்துவங்களையும், மேலை நாட்டு பிளாட்டோ. பிராட்லி, பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்றுணர்ந்து, தாமுணர்ந்த தத்துவ விழுமியங்களை விரிவுரைகள் வாயிலாகவும், புத்தகங்கள் மூலமும் மாணாக்கர்களுக்கும் ஏனையோருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  dr radhakrishnan
  dr radhakrishnan

  1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.பின்னர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” என்ற நூல், பாரம்பரிய தத்துவ இலக்கியத்தைப் பற்றிய மிகக் குறிப்பிடத்தக்க புத்தகமாக உள்ளது.

  பல வெளிநாடுகளில், சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், இராதாகிருஷ்ணன், இந்திய தத்துவத்தை உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டினார்.

  இராதாகிருஷ்ணன் 1946 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தூதராகவும்,1949 ல் சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதராகவும் பரிந்துரைக்கப்பட்டார். இந்தியக் கல்வித் துறையில் பல்கலைத்துறை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி, இந்தியக் கல்வித்துறையின் திட்டங்களை வடிவமைப்பதில் பேருதவி புரிந்தார்.

  இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றியுள்ளார் இராதாகிருஷ்ணன். இந்திய அரசு, அவருக்கு 1954 ல் பாரதரத்னா விருது வழங்கி கௌரவித்தது. இந்தியக் குடியரசுத் தலைவராக, 1962 ல் பொறுப்பேற்றார் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். 1967 க்குப் பின் அவர், சென்னையில் வாழ்ந்து வந்தார். தனது எண்பத்தாறாவது வயதில் ஏப்ரல் 17, 1975 அன்று சென்னையில் காலமானார்.

  ஆசிரியர் தினம் :

  சமூகச் சிற்பிகளான ஆசிரியர்கள் இல்லாமல் எந்த சமுதாயமும் முன்னேற முடியாது என வலியுறுத்திய, ஒரு சிறந்த ஆசிரியராக கல்விப்பணி ஆற்றிய, நம் தேசத்தின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பங்களித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் நாள், இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

  தேசிய, மாநில அரசுகள் சார்பில் ஒவ்வொரு வருடமும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கல்விச்சாலையிலும், மற்றும் சமூகக் குழுக்களும் ஆசிரியர்களைக் கௌரவித்து விருதுகள் வழங்குதல்,சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் நடத்துதல்,சிறப்பு விருந்துகள் ஏற்பாடு செய்தல் என பல்வேறு வகைகளில் “ஆசிரியர் தினத்தை” மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றன.

  இன்றைய சூழலில் ஆசிரியர் தினம்:

  முகநூல், புலனம், கீச்சகம் போன்ற சமூக வலை தளங்களின் வரவால், ஆசிரியர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்குமான தொடர்பும் உறவும் அதிகரித்துள்ளது.

  பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள் தரும் அறிவுரைகள் சலிப்பளித்திருந்தாலும், அதன் வலிமையை, பெருமையை உணர்ந்த முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை இந்நன்னாளில், தொடர்பு கொண்டு மகிழ்கிறார்கள்.

  இக்கட்டான கொரோனா காலத்திலும், ஆசிரியர்கள் தொழிநுட்ப நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் துறையின் ஆணைகள் ஒருபுறம், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு ஒருபுறம், இணையவழி நுணுக்கங்களைத் தங்களைவிட அதிகம் அறிந்திருக்கும் மாணாக்கர்கள் ஒருபுறம், தேர்வுகள் ஒருபுறம் என பல சவால்களைச் சந்தித்தாலும், தரமான கல்வியை அளித்து, மாணவர்களை நல்ல ஆளுமை உடையவர்களாக உருவாக்க இயன்ற அளவு முயற்சிக்கிறார்கள்.

  இயங்கும் தளத்தில் இமயம் அளவு மாறுதல் இருந்தாலும், இதயம் சிறக்க இன்றும் என்றும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் !

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-