அரசு சரியான நடவடிக்கை எடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை:

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது மிகவும் ஏமாற்றமானது, நீதிமன்ற உத்தரவைப் படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் போட்டி நடத்தும் பிற மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நீதிமன்ற தீர்ப்பு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கும்” என்று கூறினார்..

மேலும், இது குறித்து விவாதிக்க, நாளை தில்லி செல்வதாகவும், அதற்கான சரியான அதிகாரிகளிடம் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் கூறினார்.