ஸ்ரீவைகுண்டம் அணை தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

vaiko   ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் குறுக்கே 1869ம் ஆண்டு ஆங்கிலேயே அதிகாரி பக்கிள்துரை என்பவரின் முயற்சியால் 8அடி ஆழத்துடன் ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டது. அணையின் வடகால், தென்கால் வாய்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 560 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனைநம்பி பலஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டு சுமார் 145வருடங்கள் கடந்துவிட்டது. பராமரிப்பின்றி மணல்மேடாகி தூர்ந்துபோன அணையால் மழைக்காலங்களில் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி ஆண்டுக்கு சுமார் 15முதல் 25டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. வீணாகும் தண்ணீரால் கோடைகாலங்களில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி, விவசாயப்பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனைதவிர்த்து, விவசாயிகள், பொதுமக்களை பாதுகாத்திடும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் மற்றும் மதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பலனாக ஸ்ரீவைகுண்டம் அணை ரூ.4.44 கோடி செலவில் தூர் வாரப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிகுமார் கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் வனத்துறை ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கு எங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறியது. இதற்கிடையே வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டு விட்டது என்றும், இதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது என்றும் கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிகுமார் 10தினங்களில் அணையை தூர் வாரும் பணிகள் துவங்கப்படும் என்றும் கடந்த 20.06.2014 அன்று அறிவித்தார். அவர் அறிவித்து 10மாதங்கள் கடந்தும் அணை தூர் வாரப்படவில்லை. தற்போது ஏப்ரல், மே மாதங்கள் கோடை கால மாதங்களாகும். இம்மாதங்களில் தாமிரபரணியில் தண்ணீர்வரத்து குறைவாகவே இருக்கும். எனவே இம்மாதங்களில் அணையின் தூர் வாரும் பணிகளை எளிதில் மேற்கொள்ளமுடியும். இதற்கேற்ப 2015ம் ஆண்டின் மழைக்காலத்திற்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார உத்தரவிடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் எஸ்.ஜோயல் சென்ன¬யிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த பொதுநல வழக்கு சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி நீதியரசர் ஜோதிமணி மற்றும் ஆர்.நாகேந்திரன் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று(09.04.2015) விசாரணைக்கு வந்தது. மனுதாரரான மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜர் ஆனார். விசாரணையின் முடிவில், நீதிபதிகள் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவது தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவார காலத்திற்குள் மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து அதற்கான அனுமதியை பெறவேண்டும். மேலும், ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பரீசிலனை செய்து அணையை தூர் வாருவது தொடர்பான தகுந்த உத்தரவினை பிறப்பித்திடவேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையினை நீதிமன்றத்திலும் ஏப்ரல் 30ம் தேதி தவறாமல் தாக்கல் செய்திடவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த அதிரடி உத்தரவால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு விடிவுகாலம் பிறந்து விரைவில் தூர் வாரப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.