தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளை மோசடி வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவு

 
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளான செல்வியை மோசடி வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 2012–ம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் வி.நெடுமாறன் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்து
இருந்தார்.
அந்த புகார் மனுவில் நெடுமாறன் கூறியிருந்ததாவது:–
 
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது மருமகன் மருத்துவர் வி.எம்.ஜோதிமணி, செங்கல்பட்டு அருகே தாழம்பூர் கிராமத்தில் 2.94 ஏக்கர் நிலத்தின் பொது அதிகாரம் தன்னிடம் உள்ளதாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்யப்போவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த நிலத்தை ரூ.5.14 கோடிக்கு விலை பேசி, ரூ.3.50 கோடியை காசோலை மற்றும் ரொக்கமாக கடந்த 2007–ம் ஆண்டு அவரிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர், அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இதையடுத்து அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். அவர் அந்த பணத்துக்கு வங்கி காசோலைகள் தந்தார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து கடந்த 2011–ம் ஆண்டு பணத்தை கேட்டு சென்றபோது, ஜோதிமணியின் மாமியார் செல்வி என்னை மிரட்டினார். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
 
அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செல்வி மற்றும் ஜோதிமணி மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கின் குற்றபத்திரிகையை பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்ட செல்வி, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கவேண்டும்’ என்று கோரியிருந்தார்.
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் முன்புமோசடி வழக்கில் இருந்து செல்வியை விடுவித்து உத்தரவிட்டார்.