விமான நிலைய அதிகாரியை தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ராஜம்பேட் பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிதுன் ரெட்டி. இவர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி திருப்பதி சென்றார்.
அப்போது திருப்பதி விமான நிலையத்தில் பணியில் இருந்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரியுடன் ஏற்பட்ட தகராறில், பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி அந்த அதிகாரியை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மிதுன்ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் மதுசூதன் ரெட்டி உள்பட 19 பேர் மீது ஆந்திர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மிதுன் ரெட்டி எம்.பி.யின் உதவியாளர் முன்ஜாமீன் பெற்றார். ஆனால் முக்கிய குற்றவாளியான மிதுன் ரெட்டியும், மதுசூதன் ரெட்டியும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த மிதுன் ரெட்டி, முன்ஜாமீன் கேட்டு ஆந்திர நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அவர் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். எனவே அவர் நாடு திரும்பும் போது கைது செய்யும் நோக்கில் உள்துறை அமைச்சகம் மூலமாக அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு வந்த விமானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகியோர் வந்து இறங்கினர். இதை கண்டுபிடித்த குடிமைத்துறை அதிகாரிகள், இருவரையும் பிடித்து வைத்து ஆந்திர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆந்திர காவல் துறையினர் சென்னைக்கு வந்து இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பதி நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அவர் களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெளூரு பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



