தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருந்தால் வெளியே சென்றிருப்பார்களா? விஜயகாந்த் வேதனை

தமிழகத்தில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர்கள் ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ஆந்திர மாநில துப்பாக்கிச் சூட்டில் அரூரை அடுத்த அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்துவளவு கிராமங்களைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், நிதியுதவி வழங்கவும் விஜயகாந்த் வியாழக்கிழமை இரவு அரூருக்குச் சென்றார். அரூரில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான பயணியர் விடுதிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த் அந்த 7 குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.50 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனப் பகுதியில் நுழையும் ஒன்றும் அறியாத ஆடு, மாடுகளைக் கொல்வதற்கும்கூட தடை உத்தரவு உள்ளது. ஆனால், அப்பாவி தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை இரக்கமின்றி ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சுமார் 80 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வாய்ப்புகள் இருந்தால் ஆந்திர மாநிலத்துக்கு மரம் வெட்டும் வேலைக்குத் தொழிலாளர்கள் சென்றிருக்க மாட்டார்கள்…. என்றார்.