புது தில்லி:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரைக் கொலை செய்யப்போவதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கோவா மாநில தலைமைச் செயலகத்திற்கு கடந்த வாரம் வந்த மிரட்டல் கடிதத்தில், “நாங்கள் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரைக் கொலை செய்வோம்” என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழ் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில வாசகங்கள் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கடிதத்தின் நகல்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் இது தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காவல் துறை அதிகாரிகள், “இந்தக் கடிதத்தை அனுப்பியவர் யார் என்பதை விரைவில் கண்டு பிடித்துவிடுவோம்” என்று கூறினர்.