சாகப் போகும் நேரத்தில் சங்கரா கதையாக ஜெயலலிதா அறிவிக்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின்

சற்றுமுன்
 
சாகப்போகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது போல் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு திட்டத்தை அறிவித்ததாக தி.மு.க பொருளார் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
வெளிநடப்பு செய்தது குறித்து மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது :-
 
 
சாகப்போகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றும் ,கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் எனவும் காதில் பூ சுற்றுவது எனக் கூறுவதுண்டு. அதுபோலத்தான் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு வழங்குவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதாவது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைமைச்செயலகம் வந்து செல்கிறார். காணொலி காட்சி மூலமே அரசின் பல்வேறு திட்டங்களும் துவக்கப்படுகின்றன.
 
அ.தி.மு.க. அரசின் இறுதி ஆளுநர் உரையை இங்கே படிக்கின்ற நேரத்தில், நமது மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலை 2011 முதல் படிப்படியாகச் சரிந்து, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மேலும் சரிந்து, சாய்ந்து, தாழ்ந்து புதைகுழிக்குப் போய் விட்ட சூழ்நிலையில், இந்த அவையில் ஆளுநர் உரையாற்றும் போது, நாங்கள் அதற்குப் பார்வையாளர்களாக வீற்றிருக்க விரும்பவில்லை.
 
1-12-2015 அன்று எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியைத் திடீரென்று திறந்து விட்டது தான் சென்னை மாநகர வெள்ளப் பாழுக்குக் காரணம். இந்தப் பேரழிவுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய நீதி விசாரணை வேண்டும் என்று கோரி கருணாநிதி ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார்கள். அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. அதற்கு இதுவரை பதில் இல்லை. கவலைப்படவில்லை.முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110இன் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை ஜெயலலிதாவே இந்த அவையில் படித்தாரே; ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய திட்டங்களுக்கான அந்த அறிவிப்புகளின் கதி என்னவாயிற்று?
 
இந்த ஆட்சியில் இறுதித் தோல்வியாக, தமிழ்ப் பண்பாட்டினை எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்து வதற்கு முறைப்படி முயற்சிக்காமல், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகத் தூங்கி விட்டு, கடைசியாக தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ள முடியாமல், மத்திய அரசுக்கு கடிதம் என்ற பெயரில் பூசி மெழுகிப் பார்த்து, அதிலே பெரும் தோல்வியடைந்து, மக்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கிய அரசு தான் அ.தி.மு.க. அரசு.
 
பிறகு, ஆளுநர் உரை எதற்காக? வெற்று அலங்காரத்துக்காக; வீண் ஆரவாரத்துக்காக! அலங்காரமும், ஆரவாரமும், மக்கள் ஆற்றாது வடிக்கும் கண்ணீரைத் துடைக்காது. எனவே மாநில மக்களின் நலனை ஒதுக்கித் தள்ளி, மக்களைப் பாதுகாத்திடத் தவறி விட்ட பிறகு, சடங்குக்காக ஆற்றப்படும் சம்பிரதாயமான இந்த அரசின் ஆளுநர் உரையைப் புறக்கணித்துத் தி.மு. கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.