சென்னை சியான் மெட்ரிக்குலேசன் பள்ளி சிறுமி சுருதி பலியான வழக்கு : ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க பள்ளிக்கு உத்தரவு

சற்றுமுன்
சென்னை சேலையூரில் உள்ள சியான் மெட்ரிக்குலேசன் பள்ளியில் முடிச்சூரை சேர்ந்த சிறுமி சுருதி, 2–ம்வகுப்பு படித்து வந்தார் . அந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்து முறையாக பராமரிக்கப்படாதால் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 25–ந்தேதி சிறுமி சாலையில் விழுந்து பலியானார் .
 
நடைபெற்ற விபத்து தொடர்பாக தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில், சிறுமி சுருதியின் தந்தை சேது மாதவன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
 
அந்த வழக்கின் மனுவில் தெரிவித்ததாவது :-
என்னுடைய மகள் சுருதி, சேலையூரில் உள்ள சியான் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2–ம்வகுப்பு படித்து வந்தார். தினமும் அவர் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் பள்ளிக்கூடம் சென்று வந்தார். கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 25–ந்தேதி பள்ளி பேருந்தில் வீடு திரும்பினார்.
 
அப்போது அந்த பேருந்து முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. பஸ்சின் 6–வது வரிசையில் மிகப் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டையை ஒரு பலகையை போட்டு மறைத்து இருந்தனர். 6–வது வரிசையின் இருக்கையில் அமர்ந்திருந்த என் மகள், அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தார்.
 
அப்போது பேருந்தின் பின் சக்கரம் என் மகள் மீது ஏறி இறங்கியது. என் மகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். என் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த என் மனைவி, இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடலாலும், மனதாலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். பேருந்தை முறையாக பராமரிக்காத பள்ளி நிர்வாகம் எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் ஜெ.ஜெயராம், உறுப்பினர் பி.பாக்கியவதி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், பஸ்சை பள்ளி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. எனவே, பலியான சுருதியின் தந்தைக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக சியான் மெட்ரிக்குலேசன் பள்ளி வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.