சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிப்ரவரி 20 அன்று அறிவிப்பா ?

சற்றுமுன்
 
சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்நேற்று நடைபெற்ற இந்த அவசரக் கூட்டத்துக்கு, விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரியாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமித்ஷா சந்திப்பு தவிர்ப்பு: கூட்டணி தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் தேமுதிகவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தையை விஜயகாந்த் தவிர்த்துவிட்டார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 20 அன்று நடைபெறும் மாநாட்டில் விஜயகாந்த் தனது முடிவை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.