தேர்தல் தோல்வியால் மக்களைப் பழிவாங்க நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்: மோடி

Published:

 

திப்ரூகர்:
சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கே  மொரான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசும்போது சோனியாவும், ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்தை முடக்குவதாக  அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், மறைமுகமாக குற்றம் சாட்டிப் பேசினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது..
ஒரு குடும்பத்தினர் மட்டும் நாட்டில் எதிர்மறை அரசியலை நடத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளின் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மோடிக்கு எதிராக செயல்பட்டாலும்கூட நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற வேண்டும் எனவும் விரும்புகிறார்கள். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2014) தோல்வி அடைந்து, 400 பேரில் இருந்து 40 பேராகக் குறைந்து போனவர்கள் மோடியை பணியாற்ற விடாமல் தடுக்கின்றனர். அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அந்த சதித் திட்டத்தில் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். தேர்தலில் அடைந்த தோல்விக்காக மக்களை பழிவாங்கவே இவ்வாறு செய்கின்றனர்.

தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள போனஸ் உச்சவரம்பு அதிகரிப்பு சட்ட மசோதா, பிரம்மபுத்திராவில் போக்குவரத்து தொடர்பான மசோதா போன்ற பல முக்கியமான மசோதாக்களை அந்தக் குடும்பம் நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இதுபோல எதிர்மறை மற்றும் முட்டுக்கட்டை போடும் அரசியலில் யாராவது ஈடுபடுவார்களேயானால் இது அவர்களுக்கும் பயன் அளிக்காது, நாட்டுக்கும் நன்மை கிடைக்காது.

மாநிலத்தில் பல கட்சிகள் ஆட்சி அமைக்க நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அசாமின் கனவுகள் நனவாக வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.  அசாமில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று பேசினார்.

Related articles

Recent articles

spot_img