தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  சார்பில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

டாக்டர் கிருஷ்ணசாமி தாம் தென்காசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டால், என்ன செய்வேன் என்பதை வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், இன்னும் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவை…

எங்கள் வாக்குறுதிகள் : தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே 75% வேலைவாய்ப்பு பெற்றுத் தர சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து தமிழருக்கான பங்கீட்டை உறுதி செய்ய பாடுபடுவோம்.

தென்காசி அரசு மருத்துவமனையை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாற்றுவதற்கு குரல் கொடுப்போம்!

குற்றாலத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றவும், அதற்குண்டான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் சுற்றுலா துறை அமைச்சகத்தின் மூலம் தேவையான நிதியை பெற்றுக் கொடுப்போம்.

டாக்டர் கிருஷ்ணசாமி என்னும் நான் தென்காசித் தொகுதியில் வெற்றி பெற்றால்…

  1. ஜாதி சமூக கொடிகள் எல்லா கிராமங்கள் நகரங்கள் தோறும் தேசியக் கொடிகளாக மாற்றப்படும்.
  2. தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தை முழுமையாக ஒழிப்பேன் அனைத்துச் சமூக மக்களின் ஆதரவோடு. இது வரை பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நஷ்ட ஈடும் பெற்றுத் தருவேன்!
  3. ஜாதி அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை தடுத்து பொருளாதார வருமான அடிப்படையில் வழங்க போராடுவேன்!
  4. இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பான்மை பாரம்பரிய பூர்வீக இனமான இந்து மதத்திற்க்கு என சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்துவேன்!
  5. காதல் திருமணமாக இருந்தாலும் கலப்புத் திருமணமாக இருந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்தோடு தான் திருமணம் நடைபெற வேண்டி சட்டம் இயற்ற வலியுறுத்துவேன்!
  6. தேசியத் தலைவர்களை அதாவது பசும்பொன் தேவர், காமரஜர், வீரன் அழகுமுத்துக் கோன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி, தீரன்சின்னமலை, மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ஒண்டி வீரன் …மேலும் பல தேசியத் தலைவர்களை ஜாதி ரீதியால் பிளவு படுத்தாமல் தேசியத் தலைவர்களாக அறிவித்து விழா எடுக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்துவேன்!

7 .வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு பூர்வீக மதத்திற்கு எதிராகவோ, கலாசாரத்திற்கு எதிராகவோ, தேசியத்துக்கு எதிராகவோ பிரசாரமோ, பதிவோ அவதூறு பரப்பும் வகையிலோ செயல் பட்டால் கடுமையான தண்டணையை கொடுக்க சட்டங்களில் வழி செய்ய வலியுறுத்துவேன்.

  1. விவசாயிகள், பனை ஏறும் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அன்றாட கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் அதிகபட்ச ஊதியம், பணிபாதுகாப்பு, சிறப்பு ஊதியம், போனஸ் அளிக்கப்பட வேண்டி அரசை வலியுறுத்துவேன்.
  • என்று டாக்டர் கிருஷ்ணசாமி வாக்குறுதிகள் கொடுத்ததாக சமூக வலைத் தளங்களிலும் செய்திகள் பரவிவருகின்றன. இவற்றை பலரும் பாராட்டி, தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக – பாஜகவுடன் கூட்டணி மலர்ந்தது எப்படி? என்று, ‘புதிய தமிழகம்’ தலைவர் கிருஷ்ணசாமி தி ஹிந்து நாளிதழின் இணையதளத்துக்கு அளித்த பேட்டியையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அவரது பேட்டியில்…

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த நிலையில், மதுரையில் சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘உங்கள் கோரிக்கையை உணர்வு பூர்வமாக அறிந்திருக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்’’ என்று தெரிவித்தார். இதுவே எங்களுக்கு முதல் வெற்றி.

அதுமட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்குவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இதுதவிர ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதால் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நான்கூட பிரபலமானவன் என்று கூறலாம். அதே தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் நிலக் கோட்டை தொகுதியில் போட்டியிட்ட ராமசாமி என்பவர் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அதே ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு 400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். எனவே, அதிமுக எங்களுக்கு கூடுதல் பலம் என்று கருதுகிறோம்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். இருப்பினும் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

‘வலுவான இந்தியா, வளமான தொகுதி’ என்பது என் பிரச்சாரத்தின் முதன்மையான முழக்கமாக இருக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், பெரும்பாலான திட்டங்களுக்கு விளம்பரமே இல்லை. முக்கியமாக, பொருட்களின் விலை உயரவில்லை. உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதய அடைப்பை சரி செய்யும் ‘ஸ்டென்ட்’ சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மூட்டு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நவீன அறுவை சிகிச்சை உபகரணங்களின் விலையைக் குறைத்து, மேற்கண்ட சிகிச்சைகளுக்கான கட்டணக் குறைப்பை சாத்தியமாக்கி உள்ளனர். இந்த கட்டணம் ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

பாஜகவையும், பிரதமர் மோடியையும் மதம் என்ற கோணத்தில் மட்டுமே சிலர் பார்க்கின்றனர். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர். நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர். இதுதொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் பார்ப்பதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் சாதி, மதக் கலவரங்கள் இல்லை. தொழிலாளர் பிரச்சினைகள் கிடையாது. பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி நமது விமானப் படையினர் துல்லியத் தாக்குதல் நடத்த வழிகாட்டியதன் வாயிலாக மேலும் வலிமையான பிரதமர் ஆகியிருக்கிறார் மோடி. பாகிஸ்தான் தவிர்த்து, மற்ற அனைத்து அண்டை நாடுகளையும் நட்பு நாடுகள் ஆக்கியிருக்கிறார்.

  • என்று கூறியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...