4
நரேந்திர மோதியா… ராகுல் நேருவா என்ற போட்டியின் உள்ளார்ந்த அம்சமான இந்து நலனா… இந்து விரோதமா என்ற வடிவம் தமிழகத்திலும் தேர்தல் பரப்புரைகளிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டிருக்கிறது.
இவையெல்லாம் தேர்தல் ஆலோசகர்கள், கட்சிகள், கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளின் விளைவாக உருவாகியிருக்கும் மாற்றங்கள். வாக்காளர்கள் இப்படியான பெரிய சிந்தனைகளில் எல்லாம் சிக்குபவர்கள் அல்ல. அவர்களுடைய எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறானது. ஆனால், அவர்கள் அளிக்கும் ஆதரவென்பது வெற்றி பெறும் கட்சியின் அனைத்து கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் கொடுத்த ஆதரவாக மிக மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிறது.
நமது தேர்தலின் பலவீனமே இதுதான்.
ஜெயலலிதாவை ஊழல், அதிகார துஷ்பிரயோகம் காரணமாக ஒருமுறை தோற்கடிக்கும் மக்கள் அடுத்த ஐந்தாண்டு கழித்து அவரைத் தேர்ந்தெடுத்தால் ஜெயலலிதாவின் ஊழலுக்கும் அராஜகத்துக்கும் மக்கள் ஆதரவு அளிப்பதாகவே அவரும் அவருடைய ஆதரவாளர்களும் எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். திமுகவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தால் தனது இந்து விரோத அசட்டுக் கருத்துகளுக்கு மக்கள் தரும் ஆதரவாகவே அதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
கட்சிக்கான வாக்கு நீங்கலாக, ஒவ்வொரு முக்கிய விஷயம் சார்ந்தும் ஒரு வாக்கெடுப்பு நடக்கவேண்டும். உதாரணமாக ஒரு தேர்தலில் முக்கியமான விஷயம் என்று ஒவ்வொரு கட்சியும் சொல்லும் பத்து விஷயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். பல கட்சிகள் சொல்லும் முக்கியமான விஷயங்களில் சுமார் 25ஐ எடுத்துக்கொண்டு அதில் ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டுக்கும் வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக நீட் விஷயத்தில் ஒருவர் பாஜகவை ஆதரிக்கக்கூடும். ஜி.எஸ்.டி. விஷயத்தில் காங்கிரஸை ஆதரிக்கக்கூடும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நீட் விஷயத்தை அப்படியே முன்னெடுக்கவேண்டும். ஜி.எஸ்.டி.யில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். அதுதான் மக்களின் ஆட்சி.
இப்போதைய ஜனநாயகத்தில் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்தால் அவர்கள் இரண்டையுமே அப்படியே தொடருவார்கள். காங்கிரஸுக்கு ஆதரவு கிடைத்தால் இரண்டையுமே மாற்றுவார்கள். இந்த இரண்டுமே மக்களின் தீர்ப்புக்கு மாறான செயல்தான்.
அப்படியான நேர்மையான வழிமுறை இல்லாத காரணத்தால் ஒரு கட்சியானது வெற்றி கிடைத்தால் தன்னுடைய எல்லா கொள்கைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் கிடைத்த ஆதரவாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படவேண்டியவை அல்ல என்ற அலட்சியமும் கட்சிகளிடையே இருக்கின்றன. இதுவும் மிகப் பெரிய ஏமாற்று.
மக்களுக்கு இப்படி ஒவ்வொரு விஷயம் சார்ந்து வாக்களிக்கத் தெரியாது; அது அவசியமும் இல்லை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், நமது அரசியல் சாசனம் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் (கிராமத்துக்கும்) அந்த அதிகாரத்தைத் தரத்தான் செய்திருக்கிறது. எங்கள் பகுதியில் ஒரு தொழிற்சாலை வேண்டாம் என்று ஒரு பஞ்சாயத்து கூடி தீர்மானம் எடுத்தால் மத்திய, மாநில அரசுகளால் அதை அமல்படுத்தவேமுடியாது. இது மக்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கும் நியாயமான செயல்தான். என்ன… இதை பயன்படுத்த கட்சிகள் அனுமதிப்பதில்லை. மக்களும் அந்த உரிமையைப் பயன்படுத்துவதுமில்லை. இந்த நிலை மாறவேண்டும்.
நியூட்ரினோ ஆய்வு என்பது அபாயகரமானது அல்ல என்று மக்களுக்குப் புரியவைப்பது கடினம். அது ஒரு அணுகுண்டு… அந்த ஆய்வு மையம் வந்தால் தமிழ் நாடே அழிந்துவிடும் என்று கிளப்பப்படும் வதந்தியைத்தான் மக்கள் நம்புவார்கள். எனவே மக்களிடம் கருத்துக் கேட்டு எதையும் செய்ய முடியாது என்று சொல்பவர்கள் உண்மையில் போலியாக பயத்தைக் கிளப்புபவர்களைச் சமாளிப்பது எப்படி என்றும் மக்களுக்கு விழிப்பு உணர்வு அதிகமாக என்ன செய்யவேண்டும் என்றும்தான் சிந்திக்கவேண்டும். இப்போது இந்த இரண்டையுமே செய்வதில்லை. அதுதான் பல நேரங்களில் பெரிய பிரச்னையாக ஆகிறது.
இதைவிட தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் முடிவுகள் வந்தபின் கூட்டணி அமைப்பதென்பது மக்களை முழு முட்டாளாக ஆக்கும் செயல். ஆனால், நம் தேர்தல் இப்படியானதாகவே இருக்கிறது.
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஆதிக்க சக்திகள் தேர்தல் கூட்டணி வியூகம், பிரசார வியூகம், தேர்தல் அறிக்கை ஆகியவற்றின் மூலம் மக்களை மூளைச் சலவை செய்யப் பார்க்கிறது. தாங்கள் விரும்பும் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் அதோடு ஆட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள். எதிரான தீர்ப்பு வந்தால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலம் தான் விரும்புவதையே நடத்திக்கொள்வார்கள். அரசியல் சதுரங்கத்தில் கட்சித் தலைவர்களே பகடைக்காய்கள் என்ற சூழலில் கட்சிகளின் ஆதரவாளர்களும் அறிவுஜீவிகளும் பொதுமக்களும் வெறும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர் மட்டுமே என்பதே உண்மை.
வலது சாரி அல்லது இடது சாரி… இரண்டில் யாரோ ஒருவர்தான் ஜெயிப்பார் என்பதால் எப்படியும் ஒரு தரப்பு வெற்றி பெற்றவர்களாக ஆகிவிடும்படியாகத்தான் நிலைமை இருக்கிறது. வெற்றி பெறும் அந்தத் தரப்பினர் தமது ராஜ தந்திரச் செயல்பாடுகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே தமது அனைத்து சல்லித்தனங்களையும் சாதுரியங்களையும் அடுத்த ஐந்தாண்டுகள் பெருமிதமாக நினைத்துக்கொண்டு திரியவும் வாய்ப்புக் கிடைத்துவிடும். பூவா தலையா போடுவதில் வெற்றிக்கான வாய்ப்பு 50% என்பதும் அதற்கும் முழுவதும் அதிர்ஷ்டமே காரணம் என்பதும் மறக்கப்பட்டு வெற்றி பெற்றவரின் சாமர்த்தியமாக அது கணிக்கப்படுவது போன்ற அபத்தமே இது.
(தொடரும்)
*



