3

நரேந்திர மோதி மீதான மிகை வெறுப்பை இந்து வெறுப்பாகவும் இந்திய எதிர்ப்பாகவும் திசை திருப்பியதில் சில பிரச்னைகள் வரத்தொடங்கியிருக்கின்றன. அதாவது இந்து-இந்திய வாக்கு வங்கி என்ற ஒன்று இதனால் உருவாகத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் இதன் தடயங்கள் லேசாகத் தென்படுகின்றன.
ஜாதி எதிர்ப்பு என்ற போர்வையில் பிராமண எதிர்ப்பு; பகுத்தறிவு என்ற போர்வையிலான இந்து மத எதிர்ப்பு; வடவர் எதிர்ப்பு; தமிழ்மொழிப் பாதுகாப்பு; மாநில உரிமை என்ற போர்வையிலான தேசிய எதிர்ப்பு போன்ற தமது கொள்கைகளை நிறைவேற்றுவதில் திராவிடக் கட்சிகள் வெகுவாகத் தோற்றிருக்கின்றன (அது மிகவும் நல்ல விஷயம் என்பது வேறு விஷயம்).
எனினும் அந்தக் கட்சிகள் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெறும் தந்திரத்தில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று மலின மொழி-ஜாதி அரசியல். இரண்டாவது ஊழல் – இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுதல்.
இந்தப் பாணி அரசியல் திராவிடக் கட்சிகளுக்கு மக்களிடையே வலுவான வாக்கு வங்கியை உருவாக்கித் தந்திருக்கிறது. அதில் திமுக, திகவினர் இந்துக்களைச் சீண்டுவதைத் தங்கள் முக்கிய கொள்கையாக ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றிவந்திருக்கிறார்கள். பகுத்தறிவு என்ற பெயரில் இடை-கடைநிலை இந்துக்களின் வழிபாட்டு மரபுகளை எள்ளிநகையாடுவது உண்டு என்றாலும் இந்து என்ற பெயரில் இவர்கள் பெரிதும் கேள்விக்குட்படுத்துவதெல்லாம் பிராமண மதிப்பீடுகள், அடையாளங்களே.
இடைநிலை ஜாதியினருக்கு பிராமண அதிகாரமையங்கள் மேல் இருக்கும் இயல்பான இடைவெளியைப் பயன்படுத்தி திராவிட சக்திகள் தமது பிராமண-இந்து விரோதத்தை எந்தவிதத் தயக்கமும் இன்றி முன்வைத்து வந்திருக்கிறார்கள். இன்று இந்துக்கள் ஓரணியில் திரளத் தொடங்கியிருக்கும் நிலையில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல; இந்துத்துவர்களுக்குத்தான் எதிரிகள் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர்.
பாதிரியார்கள் அல்லது பாதிரியார்களால் வழிநடத்தப்படும் தேர்தல் வியூக அமெரிக்க ஆலோசகர்கள் தமது முகமூடியான திமுகவினருக்குப் பொதுவாகச் சொல்லிக் கொடுப்பது என்னவென்றால், திமுகவின் ஓட்டு வங்கி எப்போதுமே திமுக பக்கமே இருக்கும். இலங்கைப் படுகொலை போன்ற துரோக நிகழ்வுகளின் போதும், பாஜகவுடன் கூட்டணி என்ற கொள்கை விரோதச் செயல்களின் போதும்கூட திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் திமுகவுக்கே தொடர்ந்து வாக்களிப்பார்கள். தெய்வங்கள் மீது கண்மூடித்தனமான பக்தி கொண்டவர்களைப் போலவேதான் இவர்களும் தமது தலைவர்கள் மீது பக்தி கொண்டவர்கள். எனவே அந்த 25 சதவிகித வாக்குகளைப் பற்றிக் கவலைப்படவேண்டிய தேவையே இல்லை.
அதேபோல் அதிமுகவுக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அவர்களும் பக்தி மரபில் ஊறியவர்களே. ஊரை அடித்து உலையில் போட்டாலும் ஜெயேந்திரர் போன்ற ஆச்சாரியார்களைச் சிறையில் அடைத்து அவதூறு செய்தாலும் மகாமகம் போன்ற விழாக்களில் படுகொலைகளுக்குக் காரணமாக நடந்துகொண்டாலும் அதிமுகவுக்கு வாக்களித்துப் பழகியவர்கள் அதையேதான் செய்வார்கள். அவர்களுக்கு சுமார் 30 சதவிகித வாக்கு வங்கி வலுவாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இப்போது இல்லை. அதே நேரம் திமுகவுக்கும் கருணாநிதி இல்லை. எனவே திமுக வெல்லவேண்டுமென்றால் வேறு வாக்குக் குழுமத்தில் இருந்து வாக்குகள் கிடைத்தாகவேண்டும். இஸ்லாமிய கிறிஸ்தவ வாக்குகள் சுமார் 10-15 சதவிகிதம் இருக்கின்றன. அதை எப்படிப் பெறுவது என்பதுதான் முக்கிய இலக்கு.

இந்து மதத்தை விமர்சித்தால்தான் இஸ்லாமிய கிறிஸ்தவ வாக்கு கிடைக்கும் என்பது முட்டாள்த்தனம். எளிய இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு அதில் எந்த விருப்பமும் கிடையாது. ஆனால், இஸ்லாமிய கிறிஸ்த அடிப்படைவாதத் தலைவர்களுக்கு அது பிடிக்கும். இந்து மதத்தை விமர்சித்துப் பேசினால்தான் அவர்கள் தமது மதத்தினரிடம் திமுகவுக்கு வாக்களிக்கும்படி உத்தரவிடுவார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அந்த மக்கள் பெருமளவில் பின்பற்றுவார்கள். எனவே இந்து மதத்தை அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருப்பது நல்லது. கருணாநிதி தன் அரசியல் வாழ்க்கை முழுவதும் பின்பற்றிய வழிமுறை இது.
எம்.ஜி.ஆர். பதவியேற்றபின் அவர் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அவருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த ஒரே தகுதியின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடமும் பல முறை தோற்க நேர்ந்தது. ஆனாலும் தனது இந்துச் சீண்டல் வழிமுறையை அவர் இறுதிவரைக் கைவிடமுடியவில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் குச்சிக்கு ஏற்ப ஆடியாகவேண்டிய குரங்காகவே கடைசிவரை இருந்தார். எனவே ஸ்டாலினும் கனிமொழியும் அதே குலத் தொழில் குட்டிக்கர்ணத்தையே தேர்தலுக்கு சற்று முன்புவரை போட்டுவந்தார்கள். இது அவர்களுக்கு அந்த 10-15 சதவிகித வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து அதிமுகவை முந்த வழிவகுக்கும் என்பதே அவர்களின் இதுவரையிலான கணக்கு.
ஆனால், மத்தியில் நரேந்திர மோதியின் ஆட்சி வந்ததைத் தொடர்ந்து நிலமை மாறத் தொடங்கியிருக்கிறது. அதோடு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், வனவாசிகள் மிகுதியாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல; பாகிஸ்தானைத் தொட்டடுத்து இருக்கும் காஷ்மீரிலும் கூட பாஜகவுக்கு வலுவான ஆதரவுத் தளம் உருவாகத் தொடங்கியிருக்கிறது. அதாவது நரேந்திரமோதி மீதான மிகை எதிர்ப்புப் பிரசாரம் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பட்டியல் இன மக்களிடையே அவர் மேல் நல்லெண்ணத்தையே உருவாக்கிவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டுவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மென் இந்துத்துவம் அல்லது நாடக இந்துத்துவம் பக்கம் நகர்வது இந்துக்களிடம் மட்டுமல்ல கிறிஸ்தவ-இஸ்லாமியரிடையேயும் ஆதரவைப் பெற அவசியம் என்று திமுக, விசிக போன்ற கட்சிகளுக்குப் புதிய ஏற்பாட்டின்படி புதிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ராகுல் நேரு வட இந்தியாவில் கோவில் கோவிலாக ஏறி இறங்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனியா ராஜீவ் கூட ராம் லீலா தொடங்கி பல விழாக்களில் நெற்றித்திலகம் தரித்துக்கூட வலம் வந்ததுண்டு. வடமாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துவரும் ஆதரவு காங்கிரஸை வேட இந்துத்துவம் நோக்கி முன்பே நகர்த்திவிட்டிருந்தது. ஈவேரா மண் என்று சொல்லப்படும் தமிழகத்தில் திருமாவளவன் சிதம்பரம் கோவிலுக்கு சமீபத்தில் சென்று வந்திருக்கிறார். ஏற்கெனவே குல தெய்வ கோவில் கும்ப அபிஷேகத்தில் கலந்துகொண்டுமிருக்கிறார்.
வீரமணியின் வழக்கமான, காலகாலமான உளறலுக்கு முதல் முறையாக ஸ்டாலின் விளக்கம் தந்திருக்கிறார். உதயநிதியின் நெற்றியில் கனிமொழி திலகம் இடுகிறார். இப்படியான இந்து வேடம் அணிவதால் இந்துக்களின் வாக்கு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதாவது திமுகவில் இருக்கும் இந்துக்கள் கோபம் கொண்டு வாக்களிக்காமல் போவதை அது தடுக்கும் என்று ஆலோசகர்கள் சொல்லித்தந்திருக்கிறார்கள்.
அதிமுகவும் பிற பல கட்சிகளும் பக்தியில் ஊறித் திளைத்தவர்கள் என்பது வேறு விஷயம். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இப்படி மாறத் தொடங்கியிருப்பது இதுவே முதல் தடவை.
உண்மையான பகுத்தறிவென்றால் அது இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்ப்பதாகவே இருக்கும். இந்துக்களை இந்து மதிப்பீடுகளை விமர்சித்துவந்த திராவிட இயக்கத்தினர் உண்மையில் தமது கொள்கை சார்ந்து செயல்படுவதென்றால் இந்துக்களை மட்டும் எதிர்த்து வந்ததற்குப் பிராயச்சித்தம் செய்வதென்றால் இஸ்லாம், கிறிஸ்தவத்தையும் எதிர்க்கத் தொடங்கியிருக்கவேண்டும்.
இங்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளை எதிர்க்கத் துணிவின்றி அவர்களுக்கு அடிபணிந்து அவர்களுடைய அனுமதியை வாங்கிக் கொண்டு இந்து தெய்வங்களைப் பற்றிய விமர்சனங்களைத் திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
எனவே இந்து மதத்தின் எதிரிகள் அல்ல என்று இவர்கள் சொல்லத் தொடங்கியிருப்பதை நாம் பெரிதாக நல்ல மாற்றமாக எடுத்துக்கொள்ளவே முடியாது. அதோடு, இந்த வழியில் ஏற்கெனவே நடக்கத் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் அடுத்தகட்டமாக அளவுகடந்த இஸ்லாமிய அப்பீஸ்மெண்டைக் கையில் எடுத்துள்ளது. தெலுங்கானாவில் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் அப்பட்டமான மத வெறியை அடிப்படையாகக் கொண்டவை.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயான மருத்துமனை, இஸ்லாமிய இளைஞர்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் தொழில் தொடங்க கடனுதவி என தெளிவாக மதத்தைக் குறிப்பிட்டு கண்மூடித்தனமான சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள். வேட இந்துக்கள் கோவில் கோவிலாக ஏறுவதன் அடுத்தகட்டம் இப்படியான இஸ்லாமிய, கிறிஸ்தவ சலுகைகள்தான்.
ஜெயலலிதா தன் கடைசி காலத்தில் இதையேதான் பின்பற்றினார். இந்து கோவில்கள் மட்டுமே அரசிடம் இருப்பதும் இதன் வேறொரு வடிவமே. எனவே, திராவிட இயக்கத் தலைவர்கள் இந்து தெய்வங்களை மதிப்பதுபோல் காட்டத் தொடங்குவதென்பது நிச்சயம் அடுத்தகட்டமாக கிறிஸ்தவ, இஸ்லாமிய அப்பீஸ்மெண்டாகத்தான் போய் முடியும்.
*



