டண்டணக்கா விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Published:

rajendar-t சென்னை: தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடலுக்கு தடை விதிப்பதுடன், ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று கோரி டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்த் திரையுலகில் நான் நடித்துள்ள பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில்,ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ‘டண்டணக்கா நக்கா நக்கா…’ என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். டி.இமான் இசையமைத்த அந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலுக்கு இடையிடையே என்னுடைய பேச்சுக்கள், என்னுடைய உச்சரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தொடர்பாக என்னிடம் அவர்கள் எந்த அனுமதியையும் பெறவில்லை. இந்தப் பாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் டி.ராஜேந்தரின் ரசிகனாக படத்தில் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால், படம் முழுவதும் என்னைப் பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெறலாம். எனவே, ரோமியோ ஜூலியட்’ படம் வெளியாவதற்கு முன்பு வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து, படத்தைப் பார்த்து அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் குறித்த அறிக்கையை இந்த நீதிமன்றம் பெறவேண்டும். மேலும், ‘டண்டணக்கா நக்கா நக்கா’ பாடலுடன், ‘ரோமியோ ஜூலியட் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க ரோமியோ ஜூலியட்’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். என்று, அதில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img