சென்னை: தனக்கு ஆதரவளித்து கட்சி உறுப்பினர்களை உடன் அனுப்பி வைக்க சம்மதித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக., தலைவர் விஜயகாந்த், நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்தார். மேகதாது அணை விவகாரத்தில் பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லப் போவதாகக் கூறினார். அவருடைய அழைப்பை ஏற்று, அவரது தலைமையில், திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்ப அக்கட்சிகளின் தலைவர்கள் சம்மதித்தனர். இதனால், இன்று அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருடன் பிரதமரை சந்தித்து, மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் வேண்டுகோளை விடுக்க உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ‘எனது அழைப்பை ஏற்று குறுகிய காலத்தில் பிரதமரை சந்திக்க பிரதிநிதிகளை அனுப்பி வைத்த கட்சிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

