தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
17-வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ஆம் தேதி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதனுடன் சேர்ந்து தமிழகத்தில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, சென்னையில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரை 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதில் 337 வாக்குசாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், 157 மையங்கள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோன்று, இன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிக்கு 970 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2421 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1147 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 1209 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.



