சித்திரை திருவிழா 2019…பத்தாம் நாள் …மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ….
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மை – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர், தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர். இரு தினங்களுக்கு முன்னர், மீனாட்சியம்மை பட்டாபிஷேக நிகழ்ச்சியும், நேற்று திக்விஜய நிகழ்வும் நடைபெற்றன.
இன்று, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமிக்கு பல வண்ண பட்டு வஸ்திரங்களைச் சூட்டி, மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இன்று காலை 9.50க்கு மேல் 10.15க்குள் காப்பு நாண் கட்டப்பட்டு, சுந்தரேஸ்வரப் பெருமான் திருக்கரத்தில் இருந்து பெறப்பட்ட திருமாங்கல்யம் அன்னை மீனாட்சிக்கு அணிவிக்கப் பெற்றது.
இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார்.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புது திருமாங்கல்யம் அணிந்து கொண்டனர். பிறகு தெய்வத் தம்பதியர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருக்கல்யாணத்தைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.







