“இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி, செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, “திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளதே?’ என்று கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
முதல்வராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. திமுக தலைவரான நான்தான் முதல்வராக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
1957-இல் தொடங்கி இதுவரை நான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோற்றது இல்லை. இந்த முறை வென்றால் 6-வது முறையாக முதல்வராவேன்.
அப்படி 6-ஆவது முறையாக நான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதல் ஆள் மு.க. ஸ்டாலின்தான் என்றார் கருணாநிதி.
அதைத் தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, “அவர் முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமானால் எனக்கு இயற்கையாக ஏதேனும் நேர்ந்தால்தான்’ என்றார் கருணாநிதி.
அவர் மேலும் கூறியதாவது:
இலவசம் பயன் அளிக்காது: அதிமுக தேர்தல் அறிக்கையின் இலவச திட்ட அறிவிப்பு பயனற்றது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக நகலெடுத்து வெளியிட்டுள்ளது. பண பலத்தால் வெற்றி பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. அந்தக் கனவு பலிக்காது. தமிழகத்தில் 3-ஆவது அணியை நம்புவது எந்த விதத்திலும் பலனளிக்காது. 3-ஆவது அணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். ஆனால் அது தற்போது பல துண்டுகளாகிவிட்டன.
ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழன்னைக்கு ரூ.100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் எனக் கூறினார். ஆனால், அது அமைக்கப்படவில்லை. ஊழல் தலைவர்களை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர். அவருக்கு எதிரான திமுகவின் பிரசாரம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்றார் அவர்.



