பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் ஆப்கன் படையினர் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் அவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் அந்த நாட்டுப் படையினரும், அமெரிக்க வீரர்களும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி மீட்கப்பட்டார்.
ஆப்கன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் முகமது ஹனீஃப் அத்மர், வெளிவிவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமருக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸிடம் இந்தத் தகவலை தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
தேவையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அலி ஹைதர் கிலானியை பாகிஸ்தான் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிதவாதியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ரஸா கிலானி, தனது பதவிக் காலத்தின்போது தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மகன் அலி ஹைதர் கிலானி போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலையொட்டி, பஞ்சாப் மாகாணம், முல்தான் நகரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலி ஹைதரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அந்தக் கடத்தல் சம்பவத்தின்போது அலி ஹைதருடன் இருந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா பயங்கரவாதிகளிடமிருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தஸீரின் மகன் ஷாபாஸ் தஸீர் பாகிஸ்தான் படையினரால் மீட்கப்பட்ட இரு மாதங்களுக்குப் பிறகு, அலி ஹைதர் கிலானியும் மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் மத நிந்தனை தடைச் சட்டத்துக்கு எதிராகப் பேசி வந்த பஞ்சாப் ஆளுநர் சல்மான் தஸீரை, மும்தாஜ் காத்ரி என்ற காவலர் சுடடுக் கொன்றதும், அந்தக் குற்றத்துக்காக காத்ரி அண்மையில் தூக்கிலிடப்பட்டதும் நினைவுகூரத் தக்கது.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் மீட்பு
Popular Categories



