மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை:
தேசிய தகுதிகாண் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் 2006-இல் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால்,அந்தச் சட்டத்தை கணக்கில் கொள்ளாது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதிகாண் தேர்வை திணிப்பது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் மெளனம் சாதிப்பது முறையல்ல.
மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
தமிழக மாணவர்களின் நலன்களைக் காத்திட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம்: மருத்துவர்கள் சங்கம்
Popular Categories



