தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு

சென்னை: தமிழ் புத்தாண்டுக்கான சிறப்பு விருதுகள் மற்றும் தமிழ் தாய் விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி நவி மும்பை தமிழ் சங்கத்துக்கு தமிழ் தாய் விருது கிடைக்கிறது. இது குறித்துஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- 2014ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கபிலர் விருது – முனைவர் அ. இலலிதா சுந்தரம், உ.வே.சா. விருது – மருது அழகுராஜ், கம்பர் விருது -முனைவர் செ.வை. சண்முகம்,சொல்லின் செல்வர் விருது -மருத்துவர் சுதா சேசையன்,ஜி.யு.போப் விருது -ஜெ. நாராயணசாமி, உமறுப்புலவர் விருது -முனைவர் சே.மு. முகம்மதலி, இத்துடன் 2013ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு முனைவர் ந. தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.2015ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.மேலும் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபிலர் விருது – கவிஞர் பிறைசூடன்,உ.வே.சா. விருது -குடவாயில் பாலசுப்பிரமணியன், கம்பர் விருது – கோ. செல்வம், சொல்லின் செல்வர் விருது – சோ. சத்தியசீலன், ஜி.யு.போப் விருது -மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி), உமறுப்புலவர் விருது -மு. சாய்பு மரைக்காயர், இளங்கோவடிகள் விருது- நிர்மலா மோகன்,2014ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு து. குமரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.