சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அது தெரிவித்துள்ளது.
உள் தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே போல் திருச்சி,சேலம், திண்டுக்கல், தேனி, வேலூர், திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள் தமிழக மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 13 சென்டி மீட்டரும், கோவை பீளமேட்டில் 4 சென்டி மீட்டரும், மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை முதல் துவங்க உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை. இதனால் வேலைக்கு செல்வோர், சாலையில் பயணிப்போர் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் மழை அறிவிப்பு மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




