சென்னை: “நீதியே, நீ இன்னும் இருக்கின்றாயா?” என்ற தலைப்பில் இன்று கருணா நிதி வெளியிட்ட உடன்பிறப்புக் கடித அறிக்கையில், 13-4-2015 தேதிய ஆங்கில நாளிதழ் செய்தியை பின்னணியாகக் கொண்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கோடு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றத்தை முடிச்சு போட்டு, கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கடித அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவின் தலைமையிலான நீதிபதிகள் குழு, நீதிபதி வகேலாவின் மாறுதலுக்கு பரிந்துரை செய்தபோது, நீதிபதி வகேலா ஒரிசா உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தை விட சிறிய நீதிமன்றம் என்பதால், அதனை ஏற்றுக்கொள்வதில் தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நேர்மையோடு நடந்து கொள்வதால், அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விரைவில் மாற்றப்படவிருப்பது உண்மையா? கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை மாற்றி விட்டு, அவருக்கு அடுத்த இடத்திலே உள்ள நீதிபதி மஞ்சுநாத் அவர்களை கூடுதல் பொறுப்பில் நியமிக்க விருப்பது உண்மையா? மத்திய அரசின் சார்பாக ஒருவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா? நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுவதாக வந்த அந்த செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அல்லவா தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, வகேலா பற்றிய சில விவரங்களை உனக்கு நான் தெரிவிக்கிறேன். 2–2–2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பவானிசிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்ற விசாரணை வந்த போது, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, “சி.ஆர்.பி.சி. 24(1)ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தலைமை நீதிபதி வகேலா அவர்கள், “இந்த மேல்முறையீட்டு மனுவில் நீங்கள் (பவானி சிங்) ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது, 24 (1)ஐப் படித்து பாருங்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காத போது, பவானி சிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது” என்றெல்லாம் வகேலா உறுதிபடக் கருத்து தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பாலி நாரிமனின் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், பாலி நாரிமன் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று புகார் அளித்துள்ளார். “இந்த வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால், விசாரிப்பதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ள வேண்டும்” என்று டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி தத்துவுக்கே மனு அளித்துள்ளார் என்பதும் நினைவிலே கொள்ளத்தக்கது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய காலேஜியம் இந்த உத்தரவை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பிறப்பித்துள்ளது. நமது மதிப்பு மிக்க நீதித்துறை நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால் “மாறுதல்கள்” போடுவதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடமிருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன். ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி கடந்த பிப்ரவரி மாதம் 2015லிருந்து காலியாக இருக்கும்போது, திடீரென்று ஏன் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த “டிரான்ஸ்பர்” போடப்பட்டது? தேசிய நீதித்துறை நியமனக் கமிஷனுக்கான அறிவிக்கை திங்கள்கிழமை அன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த மாறுதலைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை” எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு 15–4–2015 அன்று விசாரணைக்கு வருவதற்குள் ஏன் இந்த மாற்றல் உத்தரவு போடப்பட்டது? கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டுள்ளதை நாம் இந்த நேரத்தில் மறந்து விட முடியாது. எனவே இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதிலே தவறு இருக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்தில் 15ஆம் தேதியன்று அளிக்கப்படும் தீர்ப்பில் பவானி சிங் நியமனம் தவறானது தான் என்று ஒருவேளை சொல்லப்படுமேயானால், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டினை விசாரிப்பதற்கு புதிய நீதிபதி ஒருவரை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும். மேலும் அரசு புதிய வழக்கறிஞராக பவானி சிங் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு. மேலும் தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் திங்களில் ஓய்வு பெறவிருப்பதால், அவருக்கு பதிலாக இந்த முக்கியமான வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதியையும் நியமிக்க வேண்டிய பொறுப்பும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே உண்டு. இந்தநிலையில் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த உச்சக்கட்ட ஊழலுக்கெல்லாம் முழு முதற்காரணம் யார்? எதற்காக இந்த மாறுதல்? இதையெல்லாம் உன்னுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நீதித் துறையின் சுதந்திரம், நேர்மை, நடுநிலை – ஆகியவற்றின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதித் துறையின் நிர்வாக முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்று சில மூத்த வழக்கறிஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும் போது நாம் என்ன பதில் கூறுவது? நமது ஜனநாயக நாட்டில் அனைத்துக்கும் மேலானது நீதித் துறை தான்; ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதே நீதித் துறைதான். அப்படிப்பட்ட உயிர்நாடியான அந்தத் துறையின் மீதே, இதுவரையில் இல்லாத அளவுக்கு, இப்படியெல்லாம் விமர்சனங்கள் வருவது நம் நாட்டுக்கும், நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் – (சத்தியமேவ ஜயதே) என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிபதி வகேலா மாற்றம்: சொத்துக் குவிப்பு வழக்கோடு முடிச்சு போடுகிறார் கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week