தாலி அகற்றும் நிகழ்ச்சியை திருட்டுத்தனமாக நடத்திய கி.வீரமணி: எச்.ராஜா பாய்ச்சல்

சென்னை தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி திருட்டுத்தனமாக நடத்தியுள்ளார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரி பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்த தகவல் கிடைத்ததும் இந்து முன்னணியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக பெரியார் திடல் வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் அதற்கு முன்னர், எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அதில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தாலி அகற்றும் நிகழ்ச்சி கடும் கண்டத்துக்கு உரியது. 10 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துவிட்டு, முன்கூட்டியே காலை 7 மணிக்கு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். திருட்டுத்தனமாக நடைபெறும் தாலிகட்டும் திருமணங்களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சியை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இந்த நிகழ்ச்சியை நடத்திய கி.வீரமணிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன் என்றார்.