வேலைநிறுத்த பாதிப்பில்லை: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின

சென்னை: தமிழகத்தில் பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து 14 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதனால் போக்குவரத்து முடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. 12–வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 28 தொழிற்சங்கங்கள் இதனை ஆதரித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் தி.மு.க.வின் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., பா.ம.க., தே.மு.தி.க. உள்பட 14 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்கவில்லை. அதிருப்தியடைந்த 14 தொழிற்சங்கங்களும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இதனால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்பட 28 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் எப்போதும் போல் இயல்பான பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. இதுபோல மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.