சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்… ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கருணாநிதி உள்பட அனைவரும் கண்டித்தனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டிக்கவில்லை. 3 நாள்களுக்குப் பிறகு மென்மையாக ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்கஅதிமுக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோடைகாலம் என்றால் தண்ணீர் பிரச்னை வரத்தான் செய்யும். திமுக ஆட்சியிலும் பிரச்னை இருந்தது. ஆனால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே வேலூர் குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் நெமிலி அருகே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப் போவதாகக் கூறினர். அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவருவதாகக் கூறினர். அதையும் செய்யவில்லை. திமுக ஆட்சின்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்தோம். அந்தப் பணிகளும் மந்தமாகச் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றார்.
மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari