சென்னை:\
எதிர்கால சமுதாயத்தை சீரழிக்க அரசியல் செய்யும் தமிழக கட்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் கல்விக்கொள்கையானது பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படவில்லை. காலசூழலுக்கு ஏற்பவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய கல்விக்கொள்கையை வகுக்க மத்திய அரசு அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்து வருவது, அனைவரும் அறிந்ததே. மாணவர்களின் இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், பாரதத்தின் பண்பாட்டில் வளரவும் தக்க விதத்தில் பாடத்திட்டம் இருப்பதோடு, மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், அவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படுவதை இந்து முன்னணி வரவேற்கிறது.
சம்ஸ்க்ருதம், இந்தி ஆகிய மொழிகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக மக்கள், இவர்களை நம்பத் தயாரில்லை, இது 1960ஆவது வருடம் இல்லை. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி முதலானவற்றில் தமிழக மாணவர்கள் பாரதம் முழுவதும் சென்று சாதனை படைக்க மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர் அவர்களும், சுவாமி விவேகானந்தர் அவர்களும் சம்ஸ்க்ருதம் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறுயிருக்கிறார்கள். மொழிகளைக் கற்க வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இதில் திமுக, அதிமுக கட்சிகளின் நாத்திக, தேசிய விரோத எண்ணங்களை திணிப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது அரசின் கடமை என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.
இதுபோன்ற வரட்டுப் பிடிவாதத்தால், தமிழகத்தில் நிறுவியிருக்க வேண்டிய நவோதாய பள்ளிகளைப் புறந்தள்ளின தமிழக அரசுகள். இவற்றை ஏற்றுக்கொண்ட பக்கத்து மாநிலங்கள் இன்று கல்வியில் முன்னேறி உள்ளன. தமிழக மாணவர்கள் உயர் கல்வியில், தொழில் நுட்ப கல்விகளில், மருத்துவ படிப்புகளில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் கொள்கை திணிப்பே காரணம். இந்தியை மூன்றாவது மொழியாகப் படிக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழியின் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. ஆனால், ஆங்கில மொழியை மட்டும் படிக்கும் தமிழக மாணவர்கள் தாய்மொழி அறிவை இழந்து வருகின்றனர் என்பது எல்லோரது கருத்தும் ஆகும்.
புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்களின் உள்நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பகிரங்க ஆதரவு தரும் தமிழக பயங்கரவாத குழுக்களைக் கண்டித்தும் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி, இந்து முன்னணி தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மாவட்டம் தோறும் நடத்த உள்ளது.
தமிழக கல்வித் துறையின் தமிழக பாடல் நூல் வெளியிட்டுள்ள பாடங்களில் ஏராளமான குளறுபடிகள். அதில் கணக்கில் அடங்காத கருத்து, எழுத்து பிழைகள். இதனைப் படிக்கும் மாணவர்கள் வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதை இந்து முன்னணிகடந்த ஆட்சியில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தும், எதனையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழக முதல்வராக ஜெயலலிதாக வந்தால், கருணாநிதி படத்தையும், அவரது பாடத்தை எடுப்பதும், கருணாநிதி முதல்வரானால் ஜெயலலிதாக படத்தையும், அவரது புகழ்பாடும் பகுதிகளை நீக்குவதும், கிழிப்பதும் மட்டுமே நடக்கிறது. பாடத்திட்டக் குழுவில் உள்ள கம்யூனிஸ்ட்கள், திராவிடக்கழக நாத்திகவாதிகள் பாடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களது கொள்கைகளை, மாணவர்களின் மூளையில் கல்வி என்ற பெயரில் திணிக்கிறார்கள்.
கல்வி நிலைய மேம்பாட்டிற்காக மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவது வேதனையானது. இன்னமும் வகுப்பறை, கழிப்பறை, நூல்நிலையம் போன்றவை அவசியமான கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகளை தமிழகத்தில் காணும்போது கான்வெண்ட் காலாச்சாரத்தில் வீழ்ந்த அரசியல்வாதிகளால் தமிழக மக்களுக்கு என்ன லாபம்? என்று நெஞ்சு விம்முகிறது.
பிற்பட்டவர்கள், சீர்மரபினர்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் நலனுக்காக செயல்படும் விடுதிகளில், இன்றியமையாத கட்டமைப்புகள் கிடையாது. பழங்கால முறையிலேயே அவை நிர்வகிக்கப்படுவதை அம்மாணவர்கள் எதிர்த்து போராடுவதை எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. இவற்றை பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டும் மாணவர்கள் நலனில் எந்தளவு அக்கறை உள்ளவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இத்துடன், சிறுபான்மை கல்வி நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள், பாலியில் வன்கொடுமைகள், நிர்வாக சீர்கெடுகள் குறித்து தினசரி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலுக்கு பயந்து அரசாங்கம் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பதில்லை. சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கொலையிலிருந்து பல கொலைகள், கற்பழிப்புகள், பாலியில் துன்புறுத்தல்கள் குறித்த எந்த வழக்கிலும் பல ஆண்டுகள் கடந்த பின்னரும், யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். நாம் எத்தகைய சமூக பாதுகாப்பில் மாணவிகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதனாலேயே மாணவிகள் இடைநிற்றல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இதனையெல்லாம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆகஸ்ட் 14 அன்று நடைபெறும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பொது மக்கள், நடுநிலையாளர்கள் கலந்துகொள்ள இந்து முன்னணி சார்பில் அழைக்கிறோம்.
என்று ராம. கோபாலன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



