காஞ்சிபுரம் அத்திவரதரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இதே போன்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜாவும் தரிசனத்தில் பங்கேற்றார்.
தொடர் விடுமுறை என்பதால் அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
அத்தி வரதரை தரிசிக்க தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், பலர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசித்து வந்தனர்.
இந்நிலையில் அத்தி வரதரை தரிசிப்பதற்கான சஹஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட், அத்தி வரதர் தரிசன டிக்கெட், அத்தி வரதர் சிறப்பு தரிசன டிக்கெட் என அனைத்து வித ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்து விட்டன.
முன்னதாக தரிசனம் செய்ய நினைக்கும் தினத்துக்கு 4 நாட்களுக்கு முன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இந்து அறநிலையத்துறை இணையதளம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 16ம் தேதி அத்தி வரதர் வைபவத்தின் கடைசி தினம் என்பதால், அன்று டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்திருந்தார்.
16ம் தேதி முழுவதும் பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், 16ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று செய்ய முடியாது.
அதோடு இனி எந்த ஆன்லைன் டிக்கெட்டும் முன்பதிவு செய்ய முடியாது. இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் தினமும் அதிகரித்து வருவதால் இனி தரிசன நேரம் 2 நாட்கள் கூட ஆகலாம் என்பதால் பக்தர்ள் முன் ஏற்பாட்டுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.




