
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)
பொருள்
கொழுகொம்பின் மீது படர்ந்துள்ள முல்லை மலர்கள் இதழ் விரிந்து நிற்கின்றன. அவற்றைத் தழுவும் கீழ்திசைக் காற்று அவற்றின் நறுமணத்தை அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. தடாகத்தில் உள்ள தாமரை மலர்ப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அன்னங்கள் கண்விழித்தெழுந்தன. அவை சிறகடித்துப் பறக்க ஆரம்பிப்பதால், அவற்றின் இறக்கையில் ஒட்டியிருந்த பனித்துகள்கள் சிதறுகின்றன. முதலையின் கோரமான பற்களுக்கிடையே சிக்கிக்கொண்டு வேதனையில் கதறிய கஜேந்திரனின் கொடுந்துயரைப் போக்கி அருளியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!
அருஞ்சொற்பொருள்
கொழுகொடி – கொழுகொம்பைப் பற்றி நிற்கும் கொடி
கொழுமலர் – நன்கு வளர்ந்த மலர், நன்கு விரிந்த மலர்
கூர்தல் – பரவுதல்
மலர்அணை – மலர்ப் படுக்கை
பள்ளிகொள் அன்னம் – படுத்துறங்கும் அன்னம்
ஈன்பனி – பனிப்பொழிவு
இருஞ்சிறகு = இரு சிறகு – இரண்டு இறக்கைகள்
விழுங்கிய – கவ்விய
பிலம்புரை = பிலம் + புரை (பிலம் – வாயகன்ற, ஆழமான பள்ளம், பாதாளம்; புரை – போன்ற)
பேழ்வாய் – பெரிய வாய்
வெள் எயிறு – வெண்மையான கோரைப் பற்கள்
உற – அழுத்தியதால்
அனுங்கி – வாடிநின்று
அழுங்கிய – கதறிய
ஆனை – யானை (கஜேந்திரன்)
ஆன்மிகம், தத்துவம்
தடாகத்தில் ‘மலர்அணைப் பள்ளிகொள் அன்னம் சிறகுதறி’ உணவு தேடிக் கிளம்பும் காட்சியின் வழியாக, பாற்கடலில் பாம்பணைப் பள்ளிகொள் பெருமாள் கருட பட்சியின் மீது அமர்ந்து ஓடிவந்த காட்சி (கஜேந்திர மோட்சம்) நினைவூட்டப்படுகிறது. பறவைகள் தங்கள் அன்றாட அலுவலைத் தொடங்குவதுபோல, பகவான் தனது பக்தர்களைக் காக்கும் அலுவலைத் தொடர்கிறான்.
***
விளக்கம்; வேதா டி.ஸ்ரீதரன்