
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
(எளிய உரையுடன்)
திருப்பாவைத் தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! (2)
பொருள்
மாந்தர்களே! பாற்கடலின்மீது அறிதுயில் செய்யும் பரமனின் திருவடிகளை அன்புடன் பாடித்தொழுது, பிறவித் தளையில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் உளமார மேற்கொண்டுள்ள இந்தப் பாவை நோன்பு பற்றிய விவரங்களைச் சொல்கிறோம், கேளுங்கள். இந்த விரதத்தின்போது நாங்கள் தினசரி அதிகாலையில் எழுந்து நீராடுவோம்; உடலுக்கு அழகு செய்யும் பொருட்களைத் தவிர்ப்போம். நாக்குக்கு ருசியான பொருட்களை விலக்குவோம். மேன்மக்கள் செய்யாத செயல்களைச் செய்ய மாட்டோம்; பொய், புறஞ்சொற்களைப் பேச மாட்டோம்; ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் பிரம்மசாரிகளுக்கும் துறவிகளுக்கும் உணவிட்டு அவர்களுக்குப் பணிவிடை புரிவோம்.
அருஞ்சொற்பொருள்
நாமும் – நாங்கள்
பாவை – பாவை நோன்பு
கிரிசைகள் – செயல்கள் (விரத நியமங்கள்)
கேளீரோ – கேட்கிறீர்களா (கேளுங்கள்)
பையத் துயில்வது – அறிதுயில், கள்ளத் தூக்கம்
பாடி – போற்றி
அடி பாடி – திருவடிகளைப் போற்றிப் பாடி
செய்யாதன – மேலோர் கடைப்பிடிக்காத வழிமுறைகள்
தீக்குறள் – பொய், புறஞ்சொல், தீச்சொல், வம்பு பேசுவது
ஐயம் – தானம்
பிச்சை – பிரம்மசாரிகள், துறவிகள் முதலியோருக்கு உணவிடுதல்
ஆந்தனையும் =ஆம் + தனையும் –
(அடியார்களின்) தேவை நிறைவு பெறும் வரை
கைகாட்டி – பிரதிபலன் எதிர்பார்க்காமல் உணவிடுவது,
தானம் செய்வது
உய்யும் ஆறு – பிறவித்தளையில் இருந்து விடுபடும் வழி
எண்ணி – ஆழ்ந்து சிந்தித்து
உகந்து – மகிழ்ந்து
நாமும் உய்யுமாறு எண்ணி, பாற்கடலில் பையத்துயின்ற பரமன் அடி பாடி, நம் பாவைக்கு உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று அமைத்துப் பொருள் கொள்ளலாம்.
எந்த மார்க்கமானாலும், அதில் செய்யத் தக்கவை யாவை, செய்யக் கூடாதவை யாவை என்பது குறித்த தெளிவு உண்டு. இதைத்தான் செய்யும் கிரிசைகள், செய்யாதன செய்யோம் என்ற வரிகளின் மூலம் அறிவிக்கிறாள்.
தீக்குறளைச் சென்றோதோம் – ஆயர்பாடியில் கோபிகைகள், ஒருவரைப் பற்றி மற்றொருவர் கிருஷ்ணனிடம் கோள் சொல்வதுண்டு. நோன்புக் காலத்தில் இதைத் தவிர்ப்போம் என்று சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.
உய்யும் ஆறு எண்ணி உகந்து –
நற்கதி அடைவதற்கான வழிகளைச் சிந்தித்துப் பார்த்து அதற்கு உகந்த செயல்களைக் கடைப்பிடிக்கிறோம். (உகந்து என்பதை ஈடுபாட்டுடன் கடைப்பிடிப்போம் என்றும் பொருள் கொள்ளலாம்.)

மொழி அழகு
பெருமாளின் தூக்கம் என்பது அறிதுயில் எனப்படும். அது உறங்குவது போல் இருந்தாலும் விழிப்பு நிலையே! இதை வேதாந்தத்தில் யோக நித்திரை என்பார்கள். பக்தி மார்க்கத்தில் கள்ள நித்திரை என்பார்கள். இதைக் குறிப்பதற்கு ஆண்டாள் பையத் துயின்ற என்ற பதத்தைப் பயன்படுத்துகிறாள்.
***
திருப்பாவை பாடியபோது ஆண்டாளுக்கு வயது ஐந்து. அவள் தன்னை கோகுலத்து ஆய்ச்சிறுமியாகவே கருதிக்கொண்டு பாவை நோன்பை அனுஷ்டித்தாள். பக்தியில் முதிர்ச்சி பெற்ற அவள் பாஷா ஞானத்திலும் கரை கண்டவள், பா இலக்கணத்திலும், தமிழ் மரபிலும், வைணவத் தத்துவத்திலும், சாஸ்திர அறிவிலும் நிகரற்றவள் என்பது திருப்பாவை உரைகளைப் படிக்கும்போது புரியும்.
எனினும், ஐந்து வயதுச் சிறுமிக்கான குழந்தைத்தனமும் அவளது பாட்டில் சிற்சில இடங்களில் தெரியும். கைகாட்டி என்னும் சொல் இத்தகையது. கர்மயோகத்தில் நிஷ்காம்ய கர்மம் என்பது முக்கியமான அம்சம். நாம் செய்யும் செயல்களின் மீது பற்று எதுவும் வைக்காமல் அவற்றின் பலன் முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுதலே நிஷ்காம்ய கர்மம். சாஸ்திரங்கள் விதிக்கும் ஏராளமான விதிமுறைகள் நம்மை நிஷ்காம்யமாகச் செயலில் ஈடுபடத் தூண்டுபவையே. இத்தகைய உன்னதமான தத்துவத்தைக் குறிப்பதற்கு ‘கைகாட்டி’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள். ஒரு சிறு குழந்தை தனது கைகளை அழகாக விரித்துக் காட்டுவதைப் போல இருக்கிறது இந்தச் சொல். கைகாட்டி என்றால், ‘என்னிடம் எதுவுமே இல்லை என்று கைகளை விரித்துக் காட்டி’ என்று பொருள். அதாவது, ‘எதுவும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் தன்னிடம் உள்ளது அனைத்தையும்’ பிறருக்குக் கொடுத்து விடுவது. கொடுக்கப்படும் பொருளின்மீது மனதில் எந்தவிதமான பற்றுதலையும் வைத்துக் கொள்ளாமல் கொடுப்பது.
ஆன்மிகம், தத்துவம்
விரதம் இருப்பவர்கள் சில விசேஷமான வெளிச்சின்னங்களைத் தரிப்பதுண்டு. உதாரணமாக, காப்புக் கட்டுதல். காப்பு என்பதே விரதம் என்ற பொருளைத் தரும். எடுத்த பணி நிறைவடையும் வரை அணியப்படுவதே காப்பு. ஒருவர் விரதம் அனுஷ்டிக்கிறார் என்பதை இதுபோன்ற புறச்சின்னங்கள் பிறருக்கு அறிவிக்கின்றன. இது மிகவும் முக்கியமான தேவையாகும். ஏனெனில், விரதம் இருப்பவரைச் சுற்றியுள்ள மனிதர்கள் அவருக்கு விரத நியமங்களைக் கடைப்பிடிக்கத் துணையாக இருப்பார்கள். அவர் விரத நியமங்களில் இருந்து தவறினால், அவற்றை அவருக்கு நினைவூட்டுவார்கள். ஆண்டாளும் அதேபோலத் தங்களது நோன்பை அனைவருக்கும் தெரிவிக்கிறாள். மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம் முதலியன பாவை நோன்பின் புறச்சின்னங்கள் என்று கருதலாம். விரத நியமங்களை இவ்வாறு அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்பதுமே ஒருவகையில் புறச்சின்னம்தான்.

***
பரமனைப் பாடுவது என்பதை விட விசேஷம், அவனது நாமத்தைப் பாடுவதும் அடியிணைகளைப் போற்றுவதும்தான். நாம் சரணடைய வேண்டியது அவனது பாதங்களையே! சரணடைவது என்றாலே பாதங்களை (சரணங்களை) அடைவது என்றுதான் பொருள். பகவானின் சரணங்களே கதி என்று தஞ்சம் அடைவதே சரணாகதி. பணிவின் முதிர்ச்சியே சரணாகதி.
ஒவ்வொரு விரதத்துக்கும் ஒரு விசேஷ வழிபடு முறை இருக்கும். பாவை நோன்பின் விசேஷ வழிபாடு, பரமனின் பாதங்களைப் பாடுவதே என்று அறிவிக்கிறாள்.
சரணாகதிதான் சம்சார பந்தங்களில் இருந்து விடுபடும் வழி (உய்யும் ஆறு) என்பதைப் புரிந்துகொண்டு (எண்ணி) அதை சிரத்தையுடன் செய்ய வேண்டும் (உகந்து). எந்தப் பணியாக இருந்தாலும், அதன் முக்கியமான அம்சம் சிரத்தைதான்.
நமது சாஸ்திரங்கள் ஏராளமான குணங்களை வலியுறுத்துகின்றன. அவற்றில் பணிவும் சிரத்தையும்தான் தலையாய குணங்கள்.
***

விரதங்களில் போகத் தியாகம் (புலன் இன்பங்களைத் துறப்பது) முக்கியமான அங்கம். ஏகாதசி விரதத்தில் முக்கியமான நியமம் உணவைத் தவிர்ப்பது. பாவை நோன்பில் நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை முதலியவை போகத் தியாகம்.
கோகுலம் என்பதே பசுக்களின் உறைவிடம். அங்கே பாலும், பால் பொருட்களும் மிகுதியாகக் கிடைக்கும். கிருஷ்ணனின் இளம் பிராயக் குறும்புகளில் பால் பொருட்களுக்கு விசேஷமான இடமுண்டு. கோபியருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களும் இவையே. இத்தகைய பொருட்களைத் துறப்பதையே பாவை நோன்பின் முக்கியமான போகத் தியாகமாகக் கொள்கிறாள் ஆண்டாள்.
மார்கழி மாதக் குளிரில் அதிகாலைப் பொழுதில் எழுந்து குளத்தில் நீராடுவதும் ஒருவகையில் போகத் தியாகம்தான். விரதங்களுக்கு இதுபோன்ற புலன் கட்டுப்பாடு இன்றியமையாதது.
***
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்பதில் இன்னொரு செய்தியும் உண்டு. கோபிகைகளின் பக்தி விசேஷமானது. அவர்கள் கண்ணனுடன் கொள்ளும் ஊடல்களும் (பிணக்குகள்) விசேஷமானவையே. கோபிகைகள், கண்ணுக்கு மைதீட்டாமலும் கூந்தலுக்குப் பூச்சூடாமலும் இருப்பது ஒருவகையில் அவனுடன் கொள்ளும் ஊடலே. கண்ணனே வந்து கெஞ்சிக்கூத்தாடி அவர்களுக்கு மைதீட்டியும் பூச்சூடியும் சமாதானப்படுத்தினால்தான் ஊடல் முடிவடையும். மாதவத்தினாலும் பெறுவதற்கரிய அவனது அனுக்கிரகத்தை கோபியர்கள் இவ்வாறு எளிய முறையில் அடைந்ததையே மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்ற வரி குறிக்கிறது. பார்க்கப்போனால், பக்தி என்பதே எளிமைதான். எளிமை என்பதை ஸஹஜம் என்று வடமொழியில் சொல்வார்கள். ஸஹ-ஜம் என்றால் பிறப்பில் இருந்து உடன் இருப்பது என்று பொருள். அதாவது இயல்பானது, இயற்கையானது. இறைசிந்தனையும் இத்தகையதே. அதற்கு அப்பாற்பட்டவைதான் நமது இயல்புக்கு முரணானவை, செயற்கையானவை.
***
செய்ய வேண்டிய செயல் எது, விலக்க வேண்டியது எது என்பதை அறிவிப்பவை சாஸ்திரங்கள். ஆனால், அவற்றைப் புரிந்து கொள்வது நம்மைப் போன்ற சாமானியர்களுக்குக் கடினமாக இருக்கிறது. அதேநேரத்தில், சாஸ்திரங்களைப் புரிந்துகொண்டு அவற்றின்படி நிற்பவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது சுலபம். எனவே, இத்தகைய மேன்மக்களின் வாழ்க்கையே நமக்கான சிறந்த வழிகாட்டி. மேன்மக்கள் தவிர்க்கும் விஷயங்களை நாமும் தவிர்க்க வேண்டும். செய்யாதன செய்யோம் என்பது இதுவே. மேன்மக்கள் செய்யாதவற்றை நாமும் செய்ய மாட்டோம் என்பது பொருள்.
***
பிச்சை (பிக்ஷை) என்பது துறவியர்க்குச் செய்யப்படும் அன்னதானம். பிரம்மசாரிகளுக்கு இடப்படுவதும் பிச்சையே. இவர்கள் இருவரும் பிச்சை எடுத்து மட்டுமே வாழ வேண்டும்.
இது தவிர, இதர வகைகளில் செய்யப்படும் தானங்கள் அனைத்தும் ஐயம் எனப்படும். பொருளாதாரத்திலோ பண்பு நலன்களிலோ நம்மை விடக் கீழ்நிலையில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் உபகாரமும் இந்த வகையே. தானம் – குறிப்பாக, அன்னதானம் – இல்லறத்தானின் அடிப்படைக் கடமையாகும். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கொடுத்துப் பராமரிக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை.
நமது சாஸ்திரங்கள் எத்தனையோ விதமான அறங்களை வலியுறுத்தினாலும், சத்தியம் (உண்மை பேசுவது, வாக்குத் தவறாமை), கொல்லாமை (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை, புலால் உண்ணாமை), ஈகை (ஐயம், பிச்சை), புகழ்பட வாழ்தல் (கீர்த்தி) ஆகிய நான்கையும் மிக அதிகமாக வலியுறுத்துகின்றன.
புகழ்பட வாழ்தல் என்றால் மேலோரால் மதிக்கப்படுமாறு வாழ்வது என்று பொருள்.
இந்தியப் பாரம்பரியத்தில் உணவு என்பது விற்பனைக்குரிய பொருள் அன்று. உணவை விற்பது பெரும் பாவம்.
உணவை உற்பத்தி செய்பவன் வேளாளன். வேளாளன் என்ற சொல்லுக்கே உபகாரி என்றுதான் பொருள். வேளாண்மை என்றால் உபகாரம். ஊர் மக்கள் அனைவரின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் பெரிய பொறுப்பைச் சுமப்பவன் விவசாயி.
அதிதி என்பவன் நமக்கு அறிமுகமில்லாதவன். உதாரணமாக, வழிப்போக்கன், யாத்ரீகன். அவனுக்கு உணவிட வேண்டியது இல்லறத்தானின் அடிப்படைக் கடமை. இல்லறத்தான் பிறருக்கு உணவிடாமல், தான் மட்டும் உணவருந்தக் கூடாது.
மகாபாரதத்தின் மிகப்பெரிய பகுதி சாந்தி பர்வம். இதில் பீஷ்மர் தர்மபுத்திரனுக்கு தர்மத்தைப் பற்றி உபதேசம் செய்கிறார். இந்தப் பகுதி மொத்தம் 24000 சுலோகங்கள்.
ராஜசூய யாகம் நிறைவடைந்த பின்னர், இந்த உபதேசங்களின் சாரத்தை கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரனுக்கு நினைவூட்டுகிறார். இது மொத்தம் பதினைந்தே சுலோகங்கள். இந்தப் பதினைந்து சுலோகங்களுமே அன்னதானத்தைப் பற்றியவை. பீஷ்மர் செய்த மொத்த உபதேசத்தின் சாராம்சம் அன்னதானம் பண்ணுவதுதான் என்பதை இதன்மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
பசித்தவனுக்காகவே பூமாதா உணவை உற்பத்தி செய்கிறாள். தனக்காகவோ, எனக்காகவோ, உனக்காகவோ அல்ல. பசித்தவன்தான் உணவைப் பெறும் தகுதி கொண்டவன். எனவே, உணவை உண்பவனாக இருப்பதுடன் நின்றுவிடாமல், உணவை வழங்குபவனாகவும் ஆவாயாக!
– என்பது நமது தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று.
சன்னியாசியும் பிரம்மசாரியும் பிக்ஷை எடுத்து மட்டுமே உணவருந்தலாம். ஒரே ஒரு வேளை உணவுத் தேவைக்கான பொருளைக்கூடச் சேமித்து வைக்கும் உரிமை இல்லாதவன் சன்னியாசி. பிரம்மசாரி (மாணவன்) நாக்குக்கு அடிமையாகக் கூடாது. மேலும், அவன் தனது அத்தியாவசியத் தேவைகள் உட்பட அனைத்துக்கும் பிறரைச் சார்ந்து மட்டுமே வாழ வேண்டும். அப்போதுதான் அவனுக்குப் பணிவு ஏற்படும்.
ஆந்தனையும், கைகாட்டி என்னும் இரு வார்த்தைகள் தானம் செய்யப்பட வேண்டிய விதத்தை விளக்குகின்றன. ஏற்பவரின் தேவையை நிறைவு செய்வதே தானம் – வெறுமனே தன்னிடம் உள்ள பொருட்களைத் தருவது அல்ல. இதுவே ஆந்தனையும் [ஆம் தனையும் – (நிறைவு) ஆகும் வரை] எனப்படுவது.
கைகாட்டி என்றால் ‘எதையுமே ஒளித்து வைக்காமல்’ என்று பொருள். ஊர்ப்பொதுக்குளத்தில் நிறைந்துள்ள நீர் எவ்வாறு அனைத்து மக்களின் தாகத்தையும் தீர்த்து வைக்குமோ, அதுபோலவே, சாஸ்திர அறிவு படைத்தவனின் செல்வம் அனைத்து மக்களின் தேவைகளையும் தீர்த்து வைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. சிரத்தையுடன் மட்டுமே தானம் வழங்க வேண்டும், சிரத்தை இல்லாமல் தானம் செய்யக்கூடாது என்பது உபநிஷத் வாக்கு.
இதுபோன்ற உன்னதமான பண்புகள் இன்னும் முழுமையாக மறைந்து விடவில்லை. எத்தனையோ ஆலயங்களில் இன்னமும் அன்னதானங்களுக்குப் பஞ்சமில்லை. திருப்பதி, தர்மஸ்தலா, மவுன்ட் அபு, அமிர்தசரஸ் முதலிய இடங்களில் தினசரி பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
வட இந்தியாவில் அன்னதானம் நிறையவே நடைபெறுகிறது. அன்னதானம் நடைபெறும் கோயில்களில் பெரும்பாலும் உணவு தயாரிப்பதற்குச் சம்பள ஆட்கள் கிடையாது, ஏராளமான குடும்பஸ்தர்கள் இந்தப் பணிகளில் தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அமர்நாத், கைலாஷ் முதலிய தலங்களுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் உணவுத் தேவைகளை உள்ளூர் மக்கள் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுகிறார்கள். உணவு வழங்கிய பின்னர், யாத்ரீகர்களை நமஸ்கரித்து ஆசிபெறுவது வழக்கம்.
நமது பண்டைய விஞ்ஞான சாதனைகளைப் பற்றி எவ்வளவோ பெருமையுடன் பேசுகிறோம். அதேபோல, நமது நாடு ஆயிரம் ஆண்டு கால அன்னியப் படையெடுப்பையும் அன்னிய ஆட்சிகளையும் தாண்டி இன்னும் தனது பாரம்பரியத்தைக் காப்பாற்றி வருகிறது என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறோம். ஆனால், நமது பாரம்பரிய உணவு விநியோக முறையைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை.
வெள்ளையன் நிலையாகக் காலூன்றும்வரை, இந்தியாவில் பட்டினிச் சாவு என்பது ஏட்டில் மட்டுமே காணப்பட்ட விஷயம். இதற்குக் காரணம் நமது வேளாண்மையும், உணவு விநியோக முறையும்தான். இந்திய வேளாண்மையின் அஸ்திவாரமாக இருந்தவன் வேளாளன்.
நமது மரபை வேத மரபு என்று பக்தியுடன் சொல்கிறோம். வேதங்கள் என்றாலே யாகங்கள்தான். யாகங்கள் என்றாலே மழைதான். மழை என்றாலே வேளாண்மைதான். நீரின் இயல்பை அறிந்தவனைப் பெரும் ஞானி என்று வேதம் கொண்டாடுகிறது. திருப்பாவையிலும் ஆண்டாள் தனது நோன்பின் பயனாக நாட்டில் குறையின்றி மழை பெய்யும் என்ற வாக்குறுதியை அளிக்கிறாள். திருவள்ளுவரோ கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பைப் பற்றித்தான் பேசுகிறார். இந்தியா முழுவதிலும் பக்தி சார்ந்த நூல்களிலும், சாஸ்திரப் புத்தகங்களிலும் வேளாண்மை பெரிதும் போற்றப்படுகிறது.
உணவை விற்பனை செய்வது மாபெரும் பாவம் என்று நமது முன்னோர்கள் கருதினார்கள். உணவு உற்பத்தி என்பதே ஆண்டவனுக்காக என்பது நமது சமுதாயத்தின் கடைக்கோடி மனிதன் வரை அனைவரது மனதிலும் பதிய வைக்கப்பட்டிருந்த பண்பாகும்.
இது ஏதோ திரேதா யுக, துவாபர யுக புராண நிகழ்வுகள் அல்ல. இந்தியாவில் வெள்ளைக்காரன் அழுத்தமாகக் காலூன்றிய பின்னரும் பல ஆண்டுகள் தொடர்ந்த மரபு இது. இந்தியாவில் நாடு தழுவிய முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தது 1891 ஆம் ஆண்டு. இந்தக் காலகட்டத்தில், இந்தியப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளைப் புரிந்து கொள்ளவே முடியாத வெள்ளையர்கள் ஏற்படுத்திய வரிவிதிப்பு முறைகள் நாடு முழுவதும் அமலில் இருந்தன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பட்டினியால் மரணமடையுமளவு நமது நாட்டின் உணவு உற்பத்தியும் உணவு விநியோகமும் சீர்குலைந்தன. இத்தகைய சூழலிலும் கூட நமது நாட்டு வேளாண் மரபு முழுமையாக மறைந்துவிடவில்லை என்பதை இந்தக் கணக்கெடுப்பு வாயிலாக அறிய முடியும்.
அதேபோல, சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு வரை நிறுவப்பட்ட அறக்கட்டளைகள், சத்திரங்கள், வேத பாடசாலைகள், அந்தக் காலத்துக் கோயில் திருப்பணிகள் முதலியவற்றில் வியாபாரிகளின் பங்களிப்புதான் மிக அதிகமாக இருந்திருக்கிறது.
இந்தியாவில் நிகழ்ந்த பாகப் பிரிவினைகள் அனைத்திலும் முதல் பங்கு பகவானுக்குத்தான்: ஏதாவது கோயிலுக்கோ, மடத்துக்கோ அல்லது பிற தொண்டு நிறுவனங்களுக்கோ தானம் கொடுத்த பின்னர்தான் சொத்தைப் பிரிப்பது என்பது சுமார் நூறு வருடங்கள் முன்பு வரை இந்தியா முழுதும் எழுதப்படாத விதியாக இருந்தது.
வேளாளனும் வியாபாரியும் அரசனும் பிராமணர்கள் இல்லை. இவர்களைச் சார்ந்துதான் பிராமணன் இருந்திருக்கிறான். அரசனுக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் அனைத்து மக்களும் இருந்தார்கள். ஆசாரியர்களும் அரசனின் மாட்சிமைக்கு உட்பட்டே செயல்பட்டிருக்கிறார்கள்.
நமது நாட்டில் எந்த ஜாதி மக்களாக இருந்தாலும், வாழ்க்கை என்பது இறைவனை நோக்கிய பயணமாகவே இருந்து வந்திருக்கிறது. இறைவன் என்பவன் அறக்கடலின் எல்லையாகத் திகழ்பவன். அறவழி வாழ்பவர்கள்தான் அவனை அடைய முடியும். இயற்கையைப் பராமரிப்பதும், சமுதாயக் கடமைகளும் அறத்தின் முக்கிய அம்சங்கள்.
***
ஐயமும் பிச்சையும், செய்யாதன செய்யோம் முதலியவை இந்த விரதத்தின் விசேஷ அம்சங்கள் என்று ஆண்டாள் பட்டியலிடுகிறாள். ஆனால் உண்மையில், இவை சாமானிய தர்மங்கள் – அதாவது, அரசன் முதல் ஆண்டி வரை எல்லோராலும் எல்லாக் காலத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. பிறகு ஏன் இவை விசேஷ தர்மங்களாகக் காட்டப்படுகின்றன என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். இத்தகைய தர்மங்களை நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும், நாம் நமது சுய இச்சையின் காரணமாக இவற்றைப் புறக்கணிக்கிறோம், புலனின்பங்களில் மூழ்குகிறோம் என்பதே யதார்த்தம். ஆயினும், விரதம் போன்றவற்றை முன்னிட்டு இத்தகைய அறச்செயல்களை நாம் நம் மீது வலிந்து திணித்துக் கொள்வதன் மூலம் நாளாவட்டத்தில் இவை நமது இயல்பான செய்கைகளாக மாறும். எனவேதான், அன்றாட தர்மங்களான இவை விசேஷமான விரத நியமங்களாகின்றன.