
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
62. ஊருக்கு உபதேசம்
ஸ்லோகம்:
பரோபதேசவேலாயாம் சிஷ்டா: சர்வே பவந்தி வை |
விஸ்மரந்தீஹ சிஷ்டத்வம் ஸ்வகார்யே சமுபஸ்திதே||
பொருள்:
பிறருக்கு அறிவுரை செய்யும் போது அனைவரும் உத்தமர்களே! தனக்கென்று வரும்போது அந்த நீதி நெறிகளை மறந்து போவார்கள்.
விளக்கம்:
‘ஊருக்குத்தான் உபதேசம்… உனக்கும் எனக்கும் இல்லை’ என்றொரு சொலவடை உள்ளது. இது அப்படிப்பட்ட கருத்தை சுட்டிக்காட்டும் ஸ்லோகம்.
சிலர், “இனிமையாக பேசவேண்டும். அன்போடு விருந்தினரை உபசரிக்க வேண்டும்” போன்ற பல உபதேசங்களை பிறருக்கு கூறுவார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது அதற்கு மாறாக நடந்து கொள்வார்கள்.
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறித்து மனநல நிபுணர்கள் கூறும் போது, “பிள்ளைகள் உங்கள் அறிவுரைப்படி நடக்க மாட்டார்கள். உங்கள் நடத்தையை அனுசரிப்பார்கள்” என்று கூறுவார்கள். உபதேசத்தை விட உதாரணமாக நடந்து கொள்வது முக்கியம். எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் கூறுவதை நிறுத்திவிட்டு நாம் கடைப்பிடிக்க முயல வேண்டும் என்ற இந்த அழைப்பு நம் அனைவருக்கும் கண்விழிப்பு ஏற்படுத்த வேண்டும்.
இதன் தொடர்பாக ஒரு புகழ்பெற்ற கதை உள்ளது. பக்கத்து வீட்டிலிருந்து ஒருவனுக்கு அழுகை சத்தம் கேட்டது. ஒரு நண்பன், அதுவும் தன்னைப் போன்ற வணிகன் துயரத்தில் உள்ளான் என்பதால் போய் விசாரித்தான். வியாபாரத்தில் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டது என்றும் கப்பல் மூழ்கி விட்டது என்றும் தந்தி வந்ததாகத் தெரிவித்தான் நண்பன்.
அவனை சமாதானப்படுத்தி, “பணம் போனால் போகிறது… நாளை சம்பாதித்துக் கொள்ளலாம்… செல்வம் நிலையில்லாதது என்று தெரியாதா?” என்று அறிவுரை கூறி விட்டு, “எங்கே அந்த தந்தியைக் காட்டு!” என்று கேட்டு வாங்கிப் பார்த்தான். இப்போது அழுவது அவன் பங்காயிற்று.
ஏனென்றால், அந்த தந்தி இவன் முகவரிக்கு வந்தது. தவறுதலாக அடுத்த வீட்டில் கொடுத்து விட்டார்கள் என்பது புரிந்தது. இப்போது இவனுடைய அழுகையை யாராலும் சமாதானப்படுத்த முடியாமல் போனது. இத்தனை நேரம் நண்பனுக்கு கூறிய வேதாந்தம் காற்றில் பறந்து போனது.