
தட்சிணாம்யான சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரை!
வாழ்க்கையில் நாம் விருத்தி செய்ய வேண்டிய முக்கிய குணங்களில் கருணை ஒன்று. இன்பமும் துன்பமும் எல்லாருடைய வாழ்க்கையிலும் மாறி மாறி வருவதால் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மற்றவர்களுக்கு உதவ ஒரு ஆர்வம் நமக்குள் ஏற்படுவதற்கு நமக்குள் கருணை இருக்கவேண்டும்.
பகவானுடைய கருணை எல்லையற்றதாக இருப்பதால் அவர் கருணைக்கடல் என்று வர்ணிக்கப்படுகிறார். லோக ஸம்ரக்ஷணத்துக்காக அனேக அவதாரங்களை எடுக்க இந்த கருணைதான் பகவானை தூண்டுகிறது.
ஒருவன் கருணையால் மற்றொருவனுக்கு உதவும் பொழுது அதற்கு கைமாறு எதிர்பார்க்கக்கூடாது. அப்பொழுதுதான் அவன் ஸத்புருஷன் என்று அழைக்கத்தக்கவன்.
கருணையினால்தான் குரு தன் சிஷ்யனுக்கு உபதேசம் செய்கிறார் என்று ஆதிசங்கர பகவத்பாதர் கூறுகிறார். சிஷ்யன் குருவை பக்தியுடன் அணுக வேண்டும். ஏனென்றால் குரு ஒரு கருணைக்கடல். மற்றும் பிரஹ்மஞானிகளில் உத்தமமானவர் என்பது பொருள்.
ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் நற்குணமான கருணையை விருத்தி செய்து நடைமுறையில் கொண்டு வர வேண்டும். மற்றவர்களுக்கு செய்யும் சிறு உதவிக்கும் அதன் புண்ணியம் உண்டு. மற்றவர்களை பற்றி நல்லதை சொல்வதே ஒரு ஸத்காரியம். தனக்கு தீங்கு செய்ய வந்த ஒரு கபாலிகாவுக்கே ஆதிசங்கரர் கருணை காட்டினார். இது உன்னதமான கருணை.
குழந்தை பருவத்தில் இருந்தே சிறுவர்களிடம் கருணையை பதிய வைக்கவேண்டும். பள்ளியில் பயிலும் பொழுதும் தங்களுடன் படிக்கிறவர்களுக்கு எவ்வித சிறு உதவியையும் அளிக்க மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
இரண்டு மனிதர்கள் சண்டை போடுவதை நாம் பார்த்தால் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்த முயற்சிப்பது நம் கடமை. கருணை நிறைந்தவர்களால் தான் இம்முயற்சியில் ஈடுபட முடியும்.
நல்ல பதவியில் இருப்பவன் தகுதியுடன் தன்னைத் தேடி வந்தவர்களுக்கு நியாயமான உதவிகளை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு நம் வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. அவைகளை தவறவிட்டால் வருத்தப்படவேண்டி வரலாம். அது அறிவில்லாமையும்கூட.
ஆதலால் எல்லோரும் மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து பகவதனுக்ரஹத்தை பெறுவார்களாக!