September 26, 2021, 3:04 am
More

  ARTICLE - SECTIONS

  சுத்தானந்த பாரதி பெயரில்… இந்திய மொழிகள் ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு பல்கலை., அமைய வேண்டும்!

  அது மொழி ஆய்வியல் மாணவர்களுக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாகவும் மொழிகளுக்கு இடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.

  kaviyogi-sudhananda-bharathi
  kaviyogi-sudhananda-bharathi

  இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பும் பெரும் பங்காற்றிய கவியோகி சுத்தானந்த பாரதியின் பெயரில், அவரது இடமான சிவகங்கையில் இந்திய மொழிகள் ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப் பட்டுள்ளன.

  இது குறித்து சிவகங்கை மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் முதுகலை & தமிழாய்வுத் துறை முன்னாள் தலைவருமான முனைவர் பெ. சுபாசு சந்திர போசு தெரிவித்ததாவது…

  நான் ஜன.18 மதியம் 2 மணிக்கு மதுரையிலிருக்கும் பேராசிரியர் ம. பெ. சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தேன். அவர் எப்போதும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பவர். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

  கவியோகி சுத்தானந்த பாரதியார் பற்றி சிவகங்கை, இராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மலருக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார். அவர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதால் நல்லாசிரியர் – மலரின் பொறுப்பாசிரியர் வேங்கடகிருஷ்ணன் (கவியோகியின் அண்ணன் மகன்) எழுதச் சொல்லியுள்ளார். இந்த நினைவுகளுடன், இன்று காலை நடைப்பயணத்தில் அலைமோதிய கவியோகியின் உரையாடல் குறித்து அவசியம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

  kaviyogishudhanada bharati
  kaviyogi shuddhananda bharati

  “ஏழை படும் பாடு “என்னும் நாவல் குறித்த பேச்சு வந்தது. அது விக்டர் யூகோ என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் பிரெஞ்சில் “Les Miserable” என்னும் பெயரில் எழுதிய மகத்தான நாவல். இந்நாவலை கவியோகி பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாகத் தமிழில் “ஏழை படும்பாடு “என்று மொழிபெயர்த்துள்ளார்.

  கவியோகியின் தாய் மொழி தெலுங்கு. அத்துடன் தமிழ், சமஸ்கிருதம், பிரெஞ்சு, ரஷ்ய மொழிகள் பல கற்று 25 ஆண்டுகள் மெளன விரதமிருந்து 500க்கு அதிகமான தமிழ் நூல்களை எழுதிய மகத்தான முதுபெரும் அறிஞர் மட்டுமல்ல; ஞானியாகவும் அறியப்பட்டவர்.

  தமிழில் கம்பனுக்குப் பிறகு “பாரத சக்தி மகா காவியம்“ படைத்தவர். இக்காவியம் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராசராசன் விருதைப் பெற்ற முதல் நூல்.

  இன்று அவரின் குடும்பத்தார் சிவகங்கைக்கு அருகிலுள்ள சோழபுரத்தில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தேசீய மேனிலைப் பள்ளியைச் சிறப்பாக விவேகானந்தர் சொல்லிய மதிப்பு வாய்ந்த கல்வி முறையில் நடத்தி வருகின்றனர். இது அரசு உதவிபெறும் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க பள்ளி.

  தமிழக அரசு கவியோகி சுத்தானந்த பாரதியாரின் அனைத்து நூல்களையும் உயர்தொகை கொடுத்து அரசுடமையாக்கி நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன்.

  நான் புதுதில்லிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பணிக்காகச் சென்ற போது லால்பகதூர் சாஸ்திரி சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் இரண்டு முறை தங்கி உள்ளேன். அது இயற்கை எழிலும் அழகிய கட்டடங்களும் , குடியிருப்பும் இணைந்த காட்சி. இன்னும் மனதை விட்டு அகலாத இயற்கையின் இனிய கொடை.

  அந்த வளாகத்தில் காலையில் தினம் தினம் நடந்தது; அந்த விருந்தினர் இல்லத்தின் உணவகத்தில் கரம்சிங் தயாரித்த சப்பாத்தியும், இட்லியும் அவர் அன்புடன் உணவு பரிமாறியதும் இன்னும் மறக்க முடியாத நல்ல நினைவுகளாக இருக்கின்றன.

  subhash-chandra-bose
  subhash-chandra-bose

  அந்தப் பல்கலைக்கழகம் போல் மத்திய அரசு சிவகங்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பெயரில் இந்திய மொழிகளின் ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புப் பல்கலைக்கழகத்தை (Kaviyogi Suddhananda Bharathiyar Indiana Languages Research and Translation Central University) உருவாக்க வேண்டும்.

  இது குறித்து யோசித்து, எதிர்வரும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நம் தமிழகத்தைச் சேர்ந்தவரும், தமிழின் சிறப்பையும் பிற மொழிகளின் மீதான தமிழின் ஆதிக்கத்தையும் நன்கு உணர்ந்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. இதற்காக, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அனத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த யோசனையை முன்மொழிய வேண்டும். இதனை மொழி ஆய்வாளர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டார்.

  தமிழ் மூத்த மொழி, தனித்துவ மொழி என்று நாம் மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரு மொழி ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புப் பல்கலைக் கழகத்தை கவியோகி சுத்தானந்த பாரதியார் பெயரில் அமைத்தால், அது மொழி ஆய்வியல் மாணவர்களுக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாகவும் மொழிகளுக்கு இடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.

  1 COMMENT

  1. மிக பெரிய மனிதர் எனது வழிகாட்டி
   வரகூர் கவி சுவாமிநாதன் முரளிதரன்

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,456FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-