spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇந்தியரைப் பற்றி இழிசொல் உரைத்த ஹிட்லர்! வெகுண்டெழுந்த வீரத் தமிழன்!

இந்தியரைப் பற்றி இழிசொல் உரைத்த ஹிட்லர்! வெகுண்டெழுந்த வீரத் தமிழன்!

- Advertisement -
shenbagaraman
shenbagaraman

‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் நினைவு நாள் (மே 26)
– நெல்லை சு.முத்து –

மே 26 இன்று, ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் என்று அழைக்கப்படும் டாக்டர் செண்பகராமன் பிள்ளை 87ஆம் நினைவு நாள்.

ஹிட்லரையே நடுங்க வைத்த தமிழ்ப்போராளி செண்பகராமன், 130 ஆண்டுகளுக்கு முன், 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் முக்கியப் பகுதியான புத்தன் சந்தை என்ற இடத்தில் பிறந்தவர். பெற்றோர் சின்னசாமிப்பிள்ளை-நாகம்மாள். தந்தை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்தார். இளம் வயதிலேயே சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார் செண்பகராமன்.

இவர் திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960க்கு முந்தைய காலத்தின் பள்ளி இறுதி பதினோராம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தபோது இந்தியாவில் விடுதலைக் கனல் எரியத்தொடங்கிய காலகட்டம். அந்த வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் ” ஏற்படுத்தி ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர்.

மன்னர் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைத் தொடங்கி, ஐரோப்பா, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற அயல்நாடுகளில் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

1914 முதல் 1920 வரை ஜெர்மனியில் வாழ்ந்து, ஆங்கிலப் படையின் இந்திய வீரர்களிடம் சுதந்திர உணர்வைத் தூண்டியவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் நாசிக்கட்சி உருவாகி வளர்ந்தது.

ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது “இந்தியர்கள் பிரிட்டீஷ்காரர்களுக்கு அடிமைகளாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே ” என்று இந்தியரைத் தாழ்த்திப் பேசினார் சர்வாதிகாரி ஹிட்லர்.

நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார். ஹிட்லருடன் முரண்பட்டதால், நாசிக் கட்சியினரின் கோபத்திற்கு ஆளான டாக்டர் செண்பகராமன், அவர்களால் உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டாராம்.

மே 26, 1934 அன்று 43ஆம் வயதில் இறப்பதற்கு முன், அவர் தெரிவித்திருந்த விருப்பப்படியே இந்தத் தியாகியின் சாம்பலில் ஒரு பகுதி, அவர் பிறந்த ஊரில், ‘திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்’ செயல்பட்டு வரும் கரமனை அருகே கிள்ளியாற்றிலும், இன்னொரு பகுதி அவரது பூர்வீகமான பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (இன்றைய கன்னியாகுமரி-நாகர்கோயில் பகுதி) நாஞ்சில் நாட்டு வயல்வெளிகளிலும் தூவப்பட்டது.

இன்றைக்கும் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அவர் பெயரில் ‘டாக்டர் செண்பகராமன் பிள்ளை நகர்’ (Dr.CRP Nagar) உள்ளது. அங்கு 54ஆம் எண்ணிட்ட சொந்த இல்லத்தில்தான் நான் வசித்து வருகிறேன் என்பது பெருமைக்குரிய ஒன்றுதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe