
யூரோ 2020 காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் தொடக்கம்.
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
காலிறுதிக்கு முந்தைய போட்டிகள் யூரோ 2020 இல் நேற்று 26 ஜூன் முதல் தொடங்கின. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டி 26 ஜூன் 2021 அன்று இந்டிய நேரப்படி 2130 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் டென்மார்க் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இரண்டாவது போட்டி இத்தாலி மற்றும் ஆஸ்திரியா அணிகளுக்கு இடையே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் 27 ஜூன் 2021 அன்று இந்திய நேரப்படி 0030 மணிக்கு நடைபெற்றது.
இவை நாக்-அவுட் போட்டிகள். எனவே தோல்வியுற்ற அணி வெளியே செல்லும்; வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
டென்மார்க் Vs வேல்ஸ் (டென்மார்க் வெற்றி, 4-0)
முதல் போட்டியில் டென்மார்க் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. டென்மார்க்கின் காஸ்பர் டோல்பெர்க் இரண்டு முறை கோல் அடித்தார், அவரது அணி வீரர்களான ஜோகிம் மேஹ்லே மற்றும் மார்ட்டின் ப்ரைத்வைட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து முடிவை உறுதிப்படுத்தினர். இதனால் 2004க்குப் பிறகு போட்டியின் கடைசி எட்டுக்குள் முதன்முறையாக டென்மார்க் முன்னேறுகிறது.
இந்த போட்டியில் வேல்ஸ் அணி மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அவர்கள் காட்டிய செயல்திறனை அவர்களால் இன்று காட்ட முடியவில்லை. இல்லாவிடில் அவர்கள் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு எட்டியிருக்க்லாம்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு, வேல்ஸ் கேப்டன் கரேத் பேல் டென்மார்க் கேப்டன் சைமன் கஜேருக்கு கையெழுத்திட்ட வேல்ஸ் சட்டையைக் கொடுத்தார். அந்தச் சட்டையின் பின்புறம் கிறிஸ்டியன் எரிக்சன் படம் இடம்பெற்றிருந்தது.
டென்மார்க்கின் தொடக்க ஆட்ட்த்தில் எரிக்சன் மாரடைப்புக்கு ஆளானது நினைவிருக்கலாம். அரையிறுதியில் இடம் பெறுவதற்காக டென்மார்க் அடுத்த சனிக்கிழமையன்று பாகுவில் நெதர்லாந்து அல்லது செக் குடியரசை எதிர்கொள்ளும்.

இத்தாலி vs ஆஸ்திரியா (இத்தாலி வெற்றி 2-1)
சனிக்கிழமை இரவு ஞாயிறு அதிகாலை காலிறுதிக்கு முன்னேற லண்டனில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. இத்தாலியின் ஃபெடரிகோ சிசா கூடுதல் நேரத்தில் கோல் அடித்தார். இந்த ஆட்டம் 90 நிமிடம் வரை கோலில்லாமல் முடிந்தது. பின்னர் இரண்டு பதினைந்து நிமிடங்களாக 30 நிமிடத்திற்கு ஆட்டம் நீட்டிக்கப்பட்டது.
முதல் பாதியில் இத்தாலி சிறப்பாக விளையாடியது. ஆனாலும் அவர்களால் ஒரு கோலைக்கூட அடிக்க முடியவில்லை. அணிகள் இடைவேளையில் கோல் இல்லாத டிராவொடு தங்களது டிரஸ்ஸிங் அறைக்குச் சென்றன.
ஆஸ்திரியா கோலடிக்காமல் போட்டியை மேலதிக நேரத்திற்கு கொண்டு செல்ல இத்தாலி சமாளித்தது. மாற்று வீரர் சிசா முதல் 15 நிமிட கூடுதல் நேர காலத்தில் கோலடித்து இத்தாலியை அடுத்த சுற்றுக்கு முன்னேற வைத்தார். மேட்டியோ பெசினா பின்னர் இத்தாலியின் இரண்டாவது கோல் அடித்தார்.
ஆஸ்திரியாவின் சாசா கலாஜ்ட்ஜிக் ஒரு கார்னர் ஷாட்டை தலையால் அடித்து கோலாக்கினார். கலாஜ்ஜிக்கில் இருந்து வந்த கோல், இத்தாலியின் கடந்த 1,168 நிமிட நேரமாக கால்பந்து ஆட்டத்தில் எதிரணியை கோலடிக்காமல் தடுத்த சிறப்பு முடித்தது.
அடுத்த வெள்ளிக்கிழமை ம்யூனிச்சில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இத்தாலி இப்போது பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகல் இடையிலான ஞாயிற்றுக்கிழமை போட்டியின் வெற்றியாளரோடு விளையாடும்.