
யூரோ 2020 – இறுதிப்போட்டி வெல்லப்போவது யார்?
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
யூரோ 2020 கால்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று, 11 ஜூலை 2021 இரவு/நாளை அதிகாலை இந்திய நேரப்படி 0030 மணிக்கு, லண்டன் விம்ப்ளே மைதானத்தில் தொடங்குகிறது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதுகின்றன. இத்தாலி அணி குரூப் A பிரிவில் இடம் பெற்றிருந்தது. குரூப் ஆட்டங்களில் துருக்கி அணியை 3-0 கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வேல்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிகண்டு குரூப்பில் முதலிடத்தைப் பிடித்தது.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்றும், அரையிறுதியில் ஸ்பெயின் அணியை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.

இதுவரை இந்த யூரோ போட்டியில் இத்தாலி அணி 15 கோல்கள் அடித்துள்ளது; அதற்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி குரூப் D பிரிவில் இடம் பெற்றது. குரூப் ஆட்டங்களில் க்ரோஷியா அணியை 1-0, செக் குடியரசு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஸ்காட்லாந்து அணியுடன் கோலடிக்காமல் ட்ரா செய்தது. காலைறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியை வெளியேற்றியது.
காலிறுதியில் உக்ரைன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதியில் டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்து அணி இதுவரை 8 கோல்கள் போட்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக 1 கோல் போடப்பட்டுள்ளது. இரு அணிகளும் மொத்தம் 27 முறை ஒருவரோடு ஒருவர் மோதியுள்ளன.
அவற்றில் 10 போட்டிகளில் இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, இங்கிலாந்து 8 வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும், இந்த நிகழ்தகவு இங்கிலாந்திற்கு மிக அதிகம். 1978இல் நடந்த உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் அஸ்ஸூரிக்கு எதிராக வென்றதில் இருந்து மூன்று சிங்கங்கள் அணியான இங்கிலாந்து இன்னமும் ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்து அரையிறுதியிலிருந்து முன்னேறியிருக்காது ஏனெனில் யூரோ 2020 அரையிறுதிக்கு முன்னதாக, இங்கிலாந்து 5இல் ஒரு அரையிறுதி வெற்றியை மட்டுமே வென்றிருக்கிறது. என்னுடைய கணிப்பின்படி இங்கிலாந்து இந்தக் கோப்பையை வெல்லும்.
அந்த அணியின் ரஹீம் ஸ்டெர்லிங், ஹாரி கேன், ல்யூக் ஷா, கைல் வாக்கர் ஆகியோர் இன்றைய போட்டியில் நல்ல முறையில் ஆடுவார்கள். 55 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை ஒரு முறைகூட யூரோ கோப்பையை வென்றதில்லை. புதிய வரலாறு படைக்கப்படுகிறதா எனப் பார்க்கலாம்.